இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வென்றது. கேப்டவுன்நகரில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 286 ரன்களும், இந்தியா 209 ரன்களும் எடுத்தன.
தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 130 ரன்களுக்கு சுருண்டது. ஷமி, பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 208 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியினரின் அனல்
வேகப்பந்துவீச்சில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அஷ்வின் 37 ரன்கள் எடுத்தார். பிலாண்டர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தென்னாப்பிரிக்கா உடனான முதல் டெஸ்ட் போட்டி தோல்விக்குப் பிறகு, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான விராட் கோலியின் ரசிகர் ஒருவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், கேப்டன் விராட் கோலி 5 ரன்னில் அவுட்டானதை பாபுலால் பரியா என்ற அந்த வயதான ரசிகர் டிவியில் பார்த்து இருக்கிறார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தீவிர கோலி ரசிகரான பாபுலால், ஐந்து ரன்னில் அவர் அவுட்டானதும் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தனக்கு தானே தீயிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் அளித்த மரண வாக்குமூலத்தில்,
‘கோலியின் விக்கெட்டால் ஏமாற்றம் அடைந்து தற்கொலை செய்து கொண்டேன்’ என தெரிவித்து இருக்கிறார். இதனை காவல்துறை உதவி ஆய்வாளர் பியார்சிங்கும் உறுதி செய்துள்ளார். ரயில்வேஸில் பணியாற்றி பாபுலால் ஓய்வு பெற்றவர். இவரது இரு மகன்களில் ஒருவரும் கடந்த 2009ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருப்பது குறிப்பிடத்தக்கது.