போட்டில மட்டுமில்ல வெளியவும் இவரு கிங் தான்…இந்தியாவை புரட்டியெடுத்த பங்களாதேஷ் வீரருக்கு உரிய மரியாதை செலுத்திய விராட் கோலி – கிஃப்ட் கொடுத்து இன்ப அதிர்ச்சி!

சூப்பர் 12 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அபாரமாக விளையாடிய வங்கதேச வீரருக்கு தனது பேட்டை பரிசாக கொடுத்திருக்கிறார் விராட் கோலி.

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்திய அணி தனது நான்காவது போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டது.

அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 184 ரன்கள் அடித்தது. இப்போட்டியிலும் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். 44 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.

இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என நினைத்திருந்தபோது, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக வந்தவர் வங்கதேச அணியின் துவக்க வீரர் லிட்டன் தாஸ். பவர்-பிளே ஓவரில் இந்திய பவுலர்கள் வீசும் பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக அடித்து திணறடித்தார்.

ஆறு ஓவர்களில் 60 ரன்களை எட்டியது வங்கதேச அணி. அப்போது லிட்டன் தாஸ் 21 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தார். நடுவில் மழை குறுகிட்டதால், ஆட்டத்தின் போக்கு முற்றிலுமாக இந்திய அணியின் பக்கம் மாறியது.

கேஎல் ராகுலின் தரமான சிந்தனையால் லிட்டன் தாஸ் ரன்-அவுட் ஆகினார். இவர் 27 பந்துகளில் 60 ரன்கள் விலாசி இந்திய அணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டு சென்றார்.

இறுதியில் இந்திய அணி தனது பந்துவீச்சின் மூலம் வங்கதேசத்தை கட்டுப்படுத்தி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லிட்டன் தாஸ் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது என்று இந்திய வீரர்களே பாராட்டினர். முன்னாள் கேப்டன் விராத் கோலி ஒரு படி மேலே சென்று இவருக்கு உரிய மரியாதையை செலுத்தி இருக்கிறார்.

அதாவது தனது பேட்டை நேராக வங்கதேச அணி வீரர்கள் இருந்த இடத்திற்கே சென்று லிட்டன் தாஸ்-இடம் அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். இதனை பார்த்த வங்கதேச அணியின் செயல் அதிகாரி, அந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில்,

“நாங்கள் அனைவரும் இரவு உணவுக்காக அமர்ந்திருந்தோம். அப்போது நேரடியாக விராட் கோலி லிட்டன் தாசிடம் வந்து தனது பேட்டை அன்பளிப்பாக கொடுத்தார். என்னை பொறுத்தவரை, லிட்டன் தாசுக்கு இது ஊக்கத்தை கொடுத்திருக்கும்.” என்றார்.

மூத்த வீரர் விராட் கோலியின் இந்த பெருமிதமான செயல் பலரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

Mohamed:

This website uses cookies.