2018-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி வீரராகவும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை தேர்வுசெய்து ஐசிசி இன்று அறிவித்தது.
ஒரு ஆண்டில் ஐசிசியின் 3 விருதுகளையும் பெற்ற முதல் பேட்ஸ்மேன் விராட் கோலி என்ற புதிய வரலாற்றைப் பெற்றார். ஐசிசி சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதைத் தொடர்ந்து 2-வது ஆண்டாகப் பெறும் விராட் கோலி, ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருநாள் வீரருக்கான விருதையும் பெற்று புதிய சாதனை படைத்தார்.

இந்த ஆண்டு முதல் முறையாக ஐசிசி டெஸ்ட் வீரருக்கான விருதைக் கோலி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாகவும் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக 5 சிறப்புகளை கோலி பெற்றுள்ளார்.
2018-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் ஐசிசி அறிவித்த டெஸ்ட், ஒருநாள் அணிக்கு கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஐசிசியின் சிறந்த வீரர், ஒருநாள், டெஸ்ட் சிறந்த வீரராகவும் கோலி தேர்வு செய்யப்பட்டார்.
இது குறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில், “ ஐசிசியின் 3 விருதுகளையும் மட்டுமல்லாமல், ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 1,322 ரன்களைச் சேர்த்து சராசரி 55.08 ரன்கள் வைத்துள்ளார். 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கோலி 1202 ரன்கள் சேர்த்து 133.55 சராசரி வைத்துள்ளார். இதில் 6 இடங்கள் அடங்கும். 10 டி20 போட்டிகளில் 211 ரன்கள் சேர்த்துள்ளார் கோலி.
இந்த விருது குறித்து கோலி கூறுகையில், “ இந்த விருது ஆண்டுமுழுவதும் கடினமாக உழைத்த அனைவருக்குமானது. ஏராளமான வீரர்கள் விளையாடும்நிலையில், ஐசிசியின் சிறப்பு மிக்க விருதுகளை நாம் பெறும் போது மிகப்பெருமையாக இருக்கிறது. உண்மையில் எனக்கு பெருமை மிக்க தருணம்.இந்த விருது எனக்கு இன்னும் ஆர்வமாக விளையாட உத்வேகத்தை அளிக்கும், தொடர்ந்து விருதுகளைப் பெற ஆர்வத்தைத் தூண்டும் “ எனத் தெரிவித்துள்ளார்.
30 வயதான கோலி, 2008-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த ஐசிசி யு-19 கிரிக்கெட்டில் அடையாளம் காணப்பட்டு அணியில் சேர்க்கப்பட்டார். கடந்த 2018-ம் ஆண்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் அதிகபட்ச ரன்கள் சேர்த்த வீரர் எனும் பெருமையை கோலி பெற்றுள்ளார்.

சர் கார்பீலட் சோபர்ஸ் சிறந்த வீரருக்கான விருதுக்குக் கோலிக்கும், தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடாவுக்கும் கடும் போட்டி ஏற்பட்டநிலையில் பெரும்பாலானவர்கள் கோலியைத் தேர்வு செய்துள்ளனர். 2-வது இடத்தை ரபாடா பெற்றார்.
இதற்கு முன் கடந்த 2012-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரருக்கான விருதைக் கோலி பெற்றுள்ளார். ஆனால், டெஸ்ட் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை இப்போதுதான் பெற்றுள்ளார். ஐசிசி ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரராகக் கோலியும், 2-வது இடத்தை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானும் பெற்றனர்
ICC Men's Cricketer of the Year ✅
ICC Men's Test Cricketer of the Year ✅
ICC Men's ODI Cricketer of the Year ✅
Captain of ICC Test Team of the Year ✅
Captain of ICC Men's ODI Team of the Year ✅Let's hear from the man himself, @imvKohli! #ICCAwards ? pic.twitter.com/3M2pxyC44n
— ICC (@ICC) January 22, 2019