பலகோடி ரூபாய் மதிப்பிலான விளம்பர ஒப்பந்தத்தை உதறிய விராட் கோலி

தனக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை மக்களிடம் புகுத்த மாட்டேன் என்று பலகோடி ரூபாய் மதிப்பிலான கூல்ட்ரிங்ஸ் விளம்பரங்களில் நடிப்பதை நிராகரித்துள்ளார் விராட் கோலி.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளங்கும் விராட் கோலி உடற்பற்சியில் அதிக கவனம் செலுத்துகிறார். 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை அணியின் கேப்டனாக திகழ்ந்த விராட் கோலி, கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்தவர்.

அதன்பின் கடந்த 2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரராக திகழ்ந்தார். முன்னணி வீரராக வளர வளர தனது உடற்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தினார்.

எந்ததெந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், எந்தெந்த குளிர்பானங்களை குடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். இதனால் தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் முன்னணி உடற்கட்டுப்பாட்டு வீரராக திகழ்கிறார்.

தற்போது எம்.ஆர்.எஃப். டயர்ஸ், பூஸ்ட், பூமா ஸ்போர்ட்ஸ் கியர், ஆடி, பெப்சி உள்பட பல விளம்பரங்களில் நடித்து வருகிறார். இதற்காக கோடிக்கணக்கில் சம்பளம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், பலகோடி வருமானம் வரக்கூடிய குளிர்பான நிறுவன விளம்பரத்தில் நடிக்க விராட் கோலி மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பதற்காக தான் உட்கொள்ளாத ஒரு பொருளை மற்றவர்கள் உட்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தமாட்டேன் என்று சமீபத்தில் கோலி கூறிய நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.

‘‘நான் எனது உடற்தகுதி குறித்து கவனத்தில் கொள்ளும்போது, எனது வாழ்க்கை  முறையை அதிக அளவில் மாற்றிக் கொண்டேன். அவற்றில் இருந்து மாறுபடுமேயானால், அதில் நான் ஒரு பகுதியாக இருக்கமாட்டேன். அல்லது அதை ஊக்குவிக்க மாட்டேன்.

பணம் கிடைக்கும் என்பதற்காக நான் ஒரு பொருளை உட்கொள்வதில்லை என்றால், மற்றவர்களை உட்கொள்ளவும் வற்புறுத்தமாட்டேன்’’ என்று கோலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.