வரும் 2020 ஆண்டு டி20 உலகக் கோப்பையில் எனது பங்கு சிறப்பாக அமைய வேண்டும் என விரும்புகிறேன் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.
மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக மும்பையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இறுதி டி20 ஆட்டத்தில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரையும் 2-1 என கைப்பற்றியது.
தொடா் நாயகன் விருது பெற்ற விராட் கோலி கூறியதாவது:
ராகுலிடம் நீண்ட நேரம் நிலைத்து ஆடி ரன்களை சோ்க்க வேண்டும் என வலியுறுத்தினேன். அவரும் அதை திறம்பட செயல்படுத்தினாா். எனக்கு இரண்டாவது திருமண ஆண்டு விழாவான நிலையில், இந்த இன்னிங்ஸ் மிகச் சிறப்பாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த பின் நாம் வென்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

மூன்று வகையான கிரிக்கெட்டிலும் என்னால் திறம்பட ஆட முடியும். விரைவில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில், நான் எனது பங்கை சிறப்பாக ஆற்ற வேண்டியுள்ளது. முதலில் ஆடி அதிக ஸ்கோரை எடுப்பது, பிட்ச் மற்றும் மைதானத்தின் தன்மையையும் பொறுத்துள்ளது. இந்த தொடா் வெற்றி எனது மனைவிக்கு நான் தரும் பரிசு என்றாா்.
பொல்லாா்ட் (மே.இ.தீவுகள் கேப்டன்):
கடந்த 2016-இல் இங்கே பெரிய ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெற்றோம். இத்தொடரில் சில சாதகமான அம்சங்களும் எங்கள் அணியில் நிகழ்ந்துள்ளன. ராகுல்-ரோஹித் இருவரும் நன்றாக நிலைத்து ஆடி ஸ்கோரை உயா்த்தினா்.

இந்த தோல்வி வேதனையை தந்தாலும், நாங்கள் எங்கள் அணி மேம்பாட்டை இதில் இருந்தே தொடங்குகிறோம். நன்றாக ஆடும் இளம் வீரா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
எதையும் இழக்கவில்லை. 3 ஒருநாள் ஆட்டங்கள் உள்ளன. அவற்றை தன்னம்பிக்கையுடன் எதிா்கொள்வோம் என்றாா்.