அடுத்த 3 ஆண்டுகளுக்கு டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் நிச்சயம் விளையாடுவேன் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியாவும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்தும் வென்றன. இதனையடுத்து இவ்விரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடர் வரும் 21 ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் “மூன்றுவிதமான கிரிக்கெட்டிலும் விளையாடுகிறீர்கள் அதில் ஏதேனும் ஒன்றிலிருந்து விலகும் எண்ணம் இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த கோலி, “எனக்கு மிகப்பெரிய திட்டங்கள் இருக்கின்றன. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு என் மனதை தயார்படுத்தி இருக்கிறேன். இப்போதைக்கும் எவ்வித கிரிக்கெட்டிலிருந்தும் விலகும் எண்ணம் இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு பின்பு இதே பதிலை நீங்கள் எதிர்பார்க்கமாட்டீர்கள்” என்றார்.
அதிகமான போட்டிகளில் விளையாடுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கோலி, “8 ஆண்டுகளாக அணியில் இருக்கிறேன். ஆண்டுக்கு 300 நாள்கள் கிரிக்கெட் விளையாடுகிறேன். இது பயணம், பயிற்சி எல்லாவற்றையும் சேர்த்துதான் சொல்கிறேன். ஆனால், ஒருபோதும் சோர்வை உணர்ந்ததில்லை, அது என்னை பாதிக்கவும் இல்லை. எல்லா வீரர்களும் தொடர்ந்து விளையாடுவதுமில்லை. நான் உள்பட அணியில் பலரும் தங்களுடைய சொந்த காரணங்களை முன்னிருத்தி, சில தொடர்களில் இருந்து விலகவும் செய்துள்ளனர்” என்றார்.

(This test match is the first Day / Night Test match that India have taken part in)
Photo by Deepak Malik / Sportzpics for BCCI
இப்போது விராட் கோலிக்கு 31 வயதாகிறது. இது குறித்தும் பேசிய கோலி, “உங்கள் உடலால் இதுக்குமேல் முடியாது என்ற எண்ணம் வரும். அநேகமாக அது 35 வயதாக இருக்கலாம். அதனால், இப்போதிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. 2023 உலகக் கோப்பை மிக முக்கியமானதாக நினைக்கிறேன். அதுவரை என்னுடைய கிரிக்கெட் திறன் நீடித்து நிலைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்