தென்னாப்பிரிக்காவுடனான 2 வது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு சாதகமாக இருப்பதாக, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சொன்னார்.
செஞ்சுரியனில் நடைபெறும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 335 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாளான நேற்று இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 307 ரன்களில் முடிவுக்கு வந்தது.

சிறப்பாக விளையாடி சதம் விளாசிய கேப்டன் விராத் கோலி 153 ரன்களில் ஆட்டமிழந்தார். 28 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. ஆட்டநேர இறுதியில் தென்னாப்பிரிக்கா 90 ரன்களை எடுத்திருந்தது. அந்த இரண்டு விக்கெட்டுகளையும் அபாரமாக பந்துவீசி வீழ்த்தினார் பும்ரா.

பின்னர் செய்தியாளர்களிடம் பும்ரா கூறும்போது, ‘இரண்டாவது இன்னிங்ஸில் மார்க்ரம், அம்லா ஆகியோரின் விக்கெட்டை விரைவிலேயே வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விராத் கோலி ஆட்டம் சிறப்பானது. போட்டியை தன் பக்கம் இழுத்து வந்துவிட்டார். இப்போது இரண்டு அணிக்குமே சாதகமாக இருக்கிறது போட்டி. விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்தி, அதை எங்கள் பக்கம் திருப்ப நாளை (இன்று) முயற்சி செய்வோம். வெற்றிக்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் இரண்டு அணிகளுக்குமே அழுத்தம் இருக்கும்’ என்றார்.