பிசிசிஐ-யுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லாத காரணத்தினால்தான் தலைமை பயிற்சியாளர் பதவி கிடைக்கவில்லை என சேவாக் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. இவரது பதவிக்காலத்தில் இந்தியா வெற்றிமேல் வெற்றிகளை குவித்தது. இவரது ஒரு வருடக்கால ஒப்பந்தம் முடிந்த பின்னர், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை.
கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே அதற்கு காரணம் என்று கூறப்பட்டது. பின்னர் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது வெளியே தெரியவந்தது.
இதனால் பிசிசிஐ தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பத்தை வெளியிட்டது. இந்த பதவிக்காக முன்னாள் அதிரடி வீரர் சேவாக் விண்ணப்பித்திருந்தார். கடைசியில்தான் ரவி சாஸ்திரி விண்ணப்பித்திருந்தார்.
சேவாக்கிற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இறுதியில் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். தான் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்படாததற்கு என்னக் காரணம் என்றும், நேர்காணல் குறித்தும் எந்த தகவலையும் சேவாக் வெளியே கூறியது கிடையாது.
இந்நிலையில் தற்போது இந்தியா டூடே டி.வி. ஷோவில் இதுகுறித்து சேவாக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பிசிசிஐ-யில் தொடர்பில்லாததுதான் தேர்வாகாததற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘நான் தேர்வாகாததற்கு, நான் பிசிசிஐயிடம் எந்த தொடர்பிலும் இருந்ததில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது நான் இங்கிலாந்தில் இருந்த சமயத்தில், ரவி சாஸ்திரியிடம், நீங்கள் ஏன் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்யவில்லை என்று கேட்டேன். அதற்கு ரவி சாஸ்திரி, நான் ஏற்கனவே ஒரு தவறை செய்து விட்டேன். இனிமேல் அந்த தவறை செய்யமாட்டேன் என்று தெரிவித்தார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி மற்றும் எம்.பி. ஸ்ரீதர் என்னிடம் வந்து தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து யோசிக்கும்படி தெரிவித்தார். நான் யோசித்து அதன்பின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்தேன்’’ என்றார்.