“நான் எப்படிப்பட்ட கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்றால்..” வாஷிங்டன் சுந்தர் மனம்திறந்து பேட்டியளித்துள்ளார்.
டி20 உலககோப்பைக்கு முன்பாக காயம் ஏற்பட்டு இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வந்த வாஷிங்டன் சுந்தர், காயத்தில் இருந்து குணமடைந்து வந்த பிறகு நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் இடம்கொடுக்கப்பட்டு விளையாட வைக்கப்பட்டார்.
இந்திய அணி நிர்வாகம் அவர் மீது வைத்த நம்பிக்கையை காப்பற்றினார். நியூசிலாந்து தொடரில் முதல் போட்டியில் 15 பந்துகளில் 37 ரன்கள், இரண்டாவது போட்டியில் நிதானமாக விளையாடி அரைசதம் என இரண்டு வெவ்வேறு சூழலிலும் அதற்கேற்றவாறு விளையாடினார்.
நடந்து முடிந்த வங்கதேசம் அணிக்கு எதிரான தொடரில் மூன்று போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி, அத்துடன் பேட்டிங்கிலும் நல்ல பங்களிப்பை கொடுத்தார். ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா போன்ற முன்னணி ஆல்ரவுண்டர்கள் இல்லாத போது, இளம் வயதில் முதிர்ச்சியுடன் இவர் செயல்பட்டது பலரின் கவனத்தையும் பெற்று இருக்கிறது.
லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், வாஷிங் ஜாபர், ரவி சாஸ்திரி போன்ற முன்னணி ஜாம்பவான்கள் பலர் இவரை 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் தனது சமீபத்திய பேட்டியில், தான் எப்படிப்பட்ட ஒரு வீரராக இந்திய அணிக்கு இருக்க வேண்டும் என வாஷிங்டன் சுந்தர் பேசியுள்ளார்.
“சமீபகாலமாக ஒருநாள் போட்டிகளில் எனக்கு கிடைத்து வரும் வாய்ப்பு மிக முக்கியமானது. அடுத்த வருடம் உலகக் கோப்பை வரவிருக்கிறது. எந்த சூழலிலும் எந்த இடத்திலும் களமிறக்கினாலும் விளையாடக்கூடிய ஒரு வீரராக வரவேண்டும். அதற்காக தீவிர பயிற்சி மற்றும் மனநிலையை வளர்த்து வருகிறேன்.
கடந்த காலங்களில் இந்திய அணிக்கு ரெய்னா, யுவராஜ் சிங் போன்றோர் வெவ்வேறு இடங்களில் களமிறங்கி சிறப்பாக தங்களது ரோலை செய்திருக்கின்றனர். அவர்களைப் போன்ற ஒரு வீரராக நானும் வரவேண்டும். இந்திய அணிக்காக வெற்றிகளை பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. அதைச்செய்ய நான் ஆவலுடன் தயாராகி வருகிறேன்.
2023 ஆம் ஆண்டு உலககோப்பைக்கு முன்பாக போதிய அளவிலான ஒருநாள் போட்டிகள் இல்லை. 10 மாதங்களில் 15க்கும் குறைவான ஒருநாள் போட்டிகளே இருப்பதால், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் எவ்வளவு தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமோ அதை செய்வேன். எந்த எதிரணியாக இருந்தாலும் எனது ரோல் என்னவென்று புரிந்து கொண்டு விளையாட வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறேன்.” என்றார்.