‘‘சுழற்பந்து வீச்சில் எனது பலமே ‘வேகம்’ தான்,’’ என சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் கூறினார்.
இந்திய கிரிக்கெட்டில் ஒருநாள் அரங்கில் குறைந்த வயதில் அறிமுகமான வீரர்களில் 7வது இடம் பெற்றவர் தமிழகத்தின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 20. இவர் 2017 மொகாலி போட்டியில் இலங்கைக்கு எதிராக களமிறங்கினார். இதன் பின் 23 ‘டுவென்டி–20’ ல் விளையாடியுள்ளார்.
‘பவர் பிளே’யில் நம்பிக்கையாக செயல்படுவார். ஊரடங்கு காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் உள்ள இவர், பந்துவீச்சில் பல்வேறு புதுமைகளை புகுத்த காத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியது:
சுழற்பந்து வீச்சில் எனது பலமே ‘வேகம்’ தான். பொதுவாக 92–93 கி.மீ., வேகத்தில் பந்து வீச விரும்புகிறேன். தவிர பந்து ‘ரிவர்ஸ் சுவிங்’ ஆவதை உறுதிப்படுத்த வேண்டும். அப்போது தான் பந்து ஆடுகளத்தில் ‘பிட்ச்’ ஆகும் போது வேகம் குறையாமல் செல்லும்.
அப்போது சுழலுடன், ‘சுவிங்கும்’ சேர்ந்து கொள்ளும் போது, பேட்ஸ்மேன்களுக்கு அது ஆச்சரியமாக இருக்கும். தவிர எனது பந்தை எதிர்கொள்ளும் போது பேட்ஸ்மேன்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் கற்றுக் கொள்ள முயற்சித்து வருகிறேன்.
இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் என இவர்கள் இருவரும் எனக்கு மிகவும் கைகொடுக்கின்றனர்.
ஒவ்வொரு போட்டி முடிந்ததும் நாங்கள் மூவரும் விவாதிப்போம். போட்டியில் செயல்பாடு எப்படி இருந்தது, அடுத்து இன்னும் எப்படி சிறப்பாக பந்துவீச வேண்டும் என ஆலோசிப்போம்.

கடந்த ஆண்டு திருவனந்தபுரத்தில் விண்டீஸ் அணி வீரர் எவின் லுாயிசிற்கு எதிராக பந்து வீசியது மறக்க முடியாதது. பரத் அருண் ‘அட்வைஸ்’ படி வீசிய இந்த பந்தில் லுாயிஸ் ‘ஸ்டம்டு’ ஆனார். எங்கள் திட்டப்படி இது சரியாக நடந்தது.
அதேபோல நியூசிலாந்தில் மன்ரோவுக்கு எதிராகவும் திட்டமிட்டு செயல்பட்டோம். எதிர்பார்த்தபடியே இவர் போல்டாகியது உற்சாகம் தந்தது.
இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் கூறினார்.