வாஷிங்டன் அரைசதத்தால், 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 219 ரன்கள் அடித்துள்ளது.
கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நியூசிலாந்து இந்தியா அணிகள் விளையாடி வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை செய்தது.
முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய துவக்க வீரர்கள் தவான் மற்றும் கில் இருவரும் இப்போர்ட்டில் சற்று தடுமாற்றம் கண்டனர். நன்றாக விளையாடி வந்த தவான்(28) மற்றும் கில்(13) இருவரும் வேகப்பந்து பேச்சாளர் ஆட்டம் மில்னே பந்தில் ஆட்டம் இழந்தனர்.
அபாரமான பார்மில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் களம் இறங்கியதில் இருந்தே நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை நன்றாக எதிர்கொண்டார். ஆனால் மற்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஒருமுறை சொதப்பி இந்திய அணிக்கு திணறல் ஏற்படுத்தினர்.
கிடைத்த வாய்ப்பை வீணடித்து வெறும் 10 ரன்களுக்கு அவுட்டானார் ரிஷப் பண்ட். ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா 12 ரன்களுக்கும், சூரியகுமார் 6 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
121 ரன்களுக்கு இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தபோது, உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் இம்முறை மிகவும் நிதானத்துடன் பந்துவீச்சை எதிர்கொண்டார்.
தீபக் சகர் 12 ரன்கள், அடுத்து வந்த சஹல் மற்றும் அர்ஷதீப் சிங் இருவருமே சொற்ப ரன்கள் என தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தனர். இறுதிவரை போராடிய வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து அசத்தினார்.
இவரின் இந்த பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. 64 பந்துகளில் 51 ரன்கள் அடித்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழக்க இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது.
அபாரமாக பந்து வீசிய நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக ஆடம் மில்னே மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அனுபவம் மிக்க மூத்த வீரர் டிம் சவுதி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
ஏற்கனவே இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இப்போது 220 ரன்கள் இலக்கை எட்டும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்தை கட்டுப்படுத்தி சமன் செய்தால் உலக சூப்பர் லீக் புள்ளிபட்டியலில் இந்திய அணி நல்ல முன்னேற்றம் காணலாம்