90’களில், கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் அனைவரின் பெயர்களுமே நமக்கு மனப்பாடமாக இருந்த காலம். நமக்கு என்றால் இங்கு 90’ஸ் கிட்ஸைத்தான் குறிப்பிடுகிறோம். நன்றாக ஆடும் வீரர்களோ, ஆடாத வீரர்களோ, தெருவில், கடற்கரையில் கிரிக்கெட் விளையாடும்போது நிஜமாக ஆடும் அணி, வீரர்களின் பெயர்களை வைத்துக் கொண்டு பத்து விக்கெட்டுகளையும் ஒரு ஆளே மாறி மாறி ஆடிய அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும்.
ஜிம்பாப்வே அணி, வெற்றிகளை விட தோல்விகள் அதிகம் கண்ட ஒரு அணி. கிரிக்கெட் உலகின் கைப்புள்ளையாக பார்க்கப்பட்டாலும் திடீர் திடீரென அந்த அணி ஏதாவது ஒரு பெரிய அணியை தோற்கடித்து ஆச்சரியப்படுத்தும். ஆண்டி ஃப்ளவர், ஹீத் ஸ்ட்ரீக், ப்ரெண்டன் டெய்லர், க்ராண்ட் ஃப்ளவர், ஆண்டி பிளவர், அலிஸ்டார் கேம்ப்பெல் என அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் பலர். டடெண்டா டாய்பு, பொம்மி பாங்க்வா, ஹாமில்டன் மஸகாட்ஸா என அந்த அணியில் சில வீரர்கள் பெயரே சொல்லிப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
இதில் நம்மில் பலர் மறந்திருக்க முடியாத ஒரு பெயர் ஹென்றி ஒலாங்கா. ஷார்ஜாவில் நடைபெற்ற ஒரு போட்டியின் போது இந்திய அதிரடி வீரர் சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை பவுன்சரில் வீழ்த்தி அவர் முன்னால் வந்து நடனம் ஆடிக்காட்டினார் ஒலாங்கா, ஆனால் அடுத்தப் போட்டியிலேயே அவருக்கு சச்சின் பாடம் நடத்தினார், எங்கு போட்டாலும் அவர் பந்துகளை சச்சின் அடித்து நொறுக்கினார். அன்று முதலே சச்சின் டெண்டுல்கரைப் பற்றி யாராவது ஏதாவது சொன்னால், ஒலாங்காவுக்கு நடந்தது இவருக்கும் நடக்கும் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் முதல் கருப்பின வீரர். ஜிம்பாப்வே கிரிக்கெட் வரலாற்றின் இளம் வீரர் என்ற இரண்டு பெருமைகளுக்கு சொந்தக்காரர். 90களின் இறுதியில் ஜிம்பாவேவின் டெஸ்ட் அணி, ஒருநாள் அணி இரண்டிலும் இடம்பெற்றிருந்தார். வேகப்பந்து வீச்சுக்கு பெயர்போனவர்.
2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, இவரும், சக வீரர் ஆண்டி ஃப்ளவரும், ஜிம்பாப்வே நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிரான ராபர்ட் முகாபேவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்கும் விதமாக கையில் கருப்புப் பட்டை கட்டி விளையாடினர். அந்த உலககோப்பை முடிவிலேயே தனது ஓய்வையும் அறிவித்தார் ஒலாங்கா.
தொடர்ந்து ஒலாங்காவை கைது செய்ய ஜிம்பாப்வேவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, நிறைய கொலை மிரட்டல்களும் வர, இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார் ஒலாங்கா. அங்கு சில வருடங்கள் வசித்த அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார்.
’தி வாய்ஸ்’, சர்வதேச அளவில் மிகப் பிரபலமான ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. நம்மூர் சூப்பர் சிங்கர், சரி கம ப போன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடி. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த தி வாய்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் ஒலாங்கா. விருந்தினராக அல்ல, போட்டியாளராக.
What a privilege to be able to sing on this amazing stage. It is a far cry from my former life and thank you to England and Australia for adopting me as one of their own and allowing me to explore new horizons #TheVoiceAU pic.twitter.com/NEjg3ddXFF
— Henry Olonga (@henryolonga) May 27, 2019
’திஸ் இஸ் தி மொமெண்ட்’ என்ற பிரபல பாடலை அவர் பாட, நடுவர்கள் அனைவரும் இவரது திறமையில் வாயடைத்து போனார்கள். இவர் பாடி முடிக்கும் வரை அங்கிருந்த பல பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
அங்கிருந்த ஒரே ஒரு நடுவருக்கு மட்டும் ஒலாங்கா சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பது தெரிந்திருக்கிறது. ஆனால் தனது கிரிக்கெட் வாழ்க்கை பற்றி ஒலங்கா குறைத்து மதிப்பிட்டே பேசியுள்ளார். ஒலாங்காவின் இந்த பாடலை ஆஸ்திரேலிய வீரர் டாரன் லீமேன், தென்னாப்பிரிக்க வீரர் ஷான் போலாக் உள்ளிட்டோர் புகழ்ந்துள்ளனர்.