இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் மீண்டும் சொதப்பினார்.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இப்போது பங்கேற்கிறது. முதலில் நடந்த 3 டெஸ்ட்டுகளில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இந்த தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.

71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி வரும் இந்திய அணி, இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அதனால் இந்த தொடரை வென்று புதிய சரித்திரம் படைக்கும் வேட்கையுடன் விராத் கோலி தலைமையிலான அணி களமிறங்கி உள்ளது.
இப்போதும் நடக்கும் டெஸ்டை டிரா செய்தால் கூட தொடரை வசப்படுத்தி விடலாம்.
ஆனால், ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்கி இருக்கிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் மார்னஸ் லாபஸ்சேஞ்ச் களமிறக்கப்பட்டுள்ளார்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல்.ராகுல் கடந்த டெஸ்ட் போட்டியில் உட்கார வைக்கப்பட்டார். மயங்க் அகர்வாலும் விஹாரியும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்நிலையில் ரோகித் சர்மா, இந்தியா திரும்பிவிட்டதால் அவருக்குப் பதிலாக ராகுல் சேர்க்கப்பட்டார். சிட்னி ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஜடேஜாவும் குல்தீப் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளனர். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி விவரம்:
விராத் கோலி, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, விஹாரி, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி மயங்க் அகர்வாலும் ராகுலும் களமிறங்கினர். ஹசல்வுட் பந்துவீச்சில் ராகுல் 9 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மயங்க் அகர்வாலும் புஜாரா இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனர். 22 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன் எடுத்து ஆடி வருகிறது. மயங்க் 39 ரன்னும் புஜாரா 14 ரன்னும் எடுத்து ஆடி வருகின்றனர்.
https://twitter.com/telegraph_sport/status/1080610216721436672