நியூசிலாந்திற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 164 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 3ஆவது மற்றும் 4ஆவது டி20 போட்டிகளில் சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை, 4-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மவுன்கவுயி நகரில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், சஞ்சு சாம்சனும் களம் இறங்கினர். 2 ரன்கள் எடுத்த நிலையில் சாம்சன் ஆட்டமிழந்தார்.
அடுத்து களம் இறங்கிய ரோஹித் சர்மா தொடக்கத்தில் நிதானமாக விளையாடினாலும், இறுதியில் அதிரடி காட்டினார். 3 பவுண்டரி, 3 சிக்ஸர் என 60 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரிடையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். இதற்கிடையே 45 ரன்கள் எடுத்த நிலையில், ராகுல் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 33(31) ரன்களுடனும், மணிஷ் பாண்டே 11(4) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 164 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து விளையாடவுள்ளது.
https://twitter.com/pugazh98/status/1223896545122107392?s=20