இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூஸிலாந்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது.
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்தியா, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்களில் ஆட்டமிழந்தது.
நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி, ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.

இந்நிலையில், மூன்று டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம், நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டனில் புதன்கிழமை நடைபெற்றது.
நியூஸிலாந்தின் தொடக்க ஆட்டக்காரரான மார்டின் கப்டில் அணியில் இடம்பெறாததால், அவருக்கு பதிலாக டிம் சிஃபெர்ட் அணியில் சேர்க்கப்பட்டார். அவரும், காலின் மன்றோவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி சிறப்பான தொடக்கத்தை தந்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை சிதறடிக்கத் தொடங்கினர்.
8.1ஆவது ஓவரில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார் டிம் சிஃபெர்ட்.
ஹார்திக் பாண்டியாவின் சகோதரரான க்ருணால் பாண்டியா வீசிய அந்த ஓவரின் 2ஆவது பந்தில் காலின் மன்றோ (20 பந்துகளில் 34 ரன்கள்) விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் வில்லியம்சன் களம் இறங்கி அதிரடி காட்டினார்.
அவர்களது இணை அணியின் ஸ்கோரை 3 இலக்கத்துக்கு இட்டுச் சென்றது. அணி 134 ரன்கள் எடுத்திருந்தபோது, கலீல் அகமது பந்து வீச்சில் போல்டு’ ஆகி நடையைக் கட்டினார் டிம். அப்போது 43 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்தார்.கிராண்ட்ஹோம் (3 ரன்கள்), ராஸ் டெய்லர் (14 பந்துகளில் 23 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதியில் மிச்செல் சாண்ட்னரும் (7 ரன்கள்), ஸ்காட் குக்ஜெலெஜினும் (20 ரன்கள்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இவ்வாறாக நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது.பின்னர், கடினமான இலக்குடன் களம் இறங்கியது இந்திய அணி. கேப்டன் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர்.
முதல் 2 ஓவர்களில் தவன் சிக்ஸர்களை பறக்கவிட இந்திய ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். எனினும், 2.2ஆவது ஓவரில் டிம் சௌதி வீசிய பந்தில் பெர்குசனிடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் ஆட்டமிழந்தார் ரோஹித்.தோனி 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தார். சௌதி வீசிய பந்தில் பெர்குசனிடம் கேட்ச் ஆகி தோனி ஆட்டமிழந்தார்.

இவ்வாறாக 19.2 ஓவர்களில் 139 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி.
நியூஸிலாந்து தரப்பில் டிம் சௌதி 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், பெர்குசன், சாண்ட்னர், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டாரில் மிச்செல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
84 ரன்கள் குவித்த டிம் சிஃபெர்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
https://twitter.com/WastingBalls/status/1093060649297629184