இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, தமது மகளுடன் பைக் ஓட்டும் வீடியோவை, வடிவேலு காமெடியுடன் பொருத்தி சென்னை சூப்பர் கிங்ஸ், ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
பொது முடக்க காலத்தில் தமது மகளை பைக்கில் ஒரு ரவுண்டு அழைத்து செல்லும் தோனியின் வீடியோவை அவரது மனைவி சாக்சி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் ஒரு காட்சி, சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தோனி பைக் ஓட்டும் காட்சியை வைகைப்புயல் வடிவேலு பார்க்க விரும்பினால், எப்படி இருக்கும் என பதிவிட்டு, “வாம்மா மின்னல்” காமெடியுடன் தோனியின் வீடியோவை இணைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவிட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின்பு இந்திய அணியின் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஏதும் விளையாடவில்லை என்றாலும் அவரைப் பற்றிய விவாதங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அதுவும் தோனி எப்போது ஓய்வை அறிவிப்பார் என்று பலரும், அவர் ஓய்வை அறிவிக்கக் கூடாது என்று சிலரும் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தோனி ஐபிஎல் போட்டிகளை குறிவைத்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் பற்றி கவலைப்படாத தோனி, இந்த ஊரடங்கு காலத்தை தனது வீட்டில் தோட்ட வேலைகள் செய்தும், ஓய்வெடுத்தும், மகிழ்ச்சியோடு செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
What if Vaigai Puyal #Vadivelu was desperately wanting to see #Thala @msdhoni, just like the rest of us?! ??? #SoundOn #WhistlePodu VC: @SaakshiSRawat pic.twitter.com/Ou1GG2KFNb
— Chennai Super Kings (@ChennaiIPL) April 26, 2020
இந்நிலையில் இன்ஸ்டகிராமில் ரோஹித் சர்மாவுடனான உரையாடலில் தோனி பற்றி ஹர்பஜன் சிங் கூறியதாவது:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ஐபிஎல் பயிற்சி முகாமில் பங்கேற்றபோது பலரும் என்னிடம் தோனி மீண்டும் விளையாடுவாரா, டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வாக வாய்ப்புண்டா எனக் கேட்டார்கள். எனக்குத் தெரியாது. அதை அவர் தான் முடிவு எடுக்கவேண்டும் என்றேன்.
ஐபிஎல்-லில் அவர் 100% விளையாடுவார். ஆனால், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என அவர் விரும்புகிறாரா என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். எனக்குத் தெரிந்து அவருக்கு விருப்பம் இல்லை எனத் தெரிகிறது. இந்திய அணிக்காக அவர் போதுமானவரை விளையாடிவிட்டார். அவரைப் பற்றி எனக்குத் தெரிந்தவரை, மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என அவர் விரும்பவில்லை. இந்திய அணிக்காகக் கடைசியாக விளையாடிய உலகக் கோப்பை ஆட்டமே அவருடைய கடைசி ஆட்டம் என அவர் முடிவெடுத்துவிட்டதாகத் தெரிகிறது. பலரும் என்னிடம் இதைப் பற்றி கூறியுள்ளார்கள் என்றார்.