இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று (புதன்கிழமை) தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹசிம் ஆம்லா மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் பூம்ரா பந்துவீச்சில் திணறினர். முதல் விக்கெட்டாக ஆம்லா 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, டி காக் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, கேப்டன் டூ பிளெஸ்ஸி மற்றும் வான் டேர் டஸன் பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்களைக் கடந்து பயணித்தது.

இந்த நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சில் சாஹல் அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் முதலில் வான் டேர் டஸனை போல்டாக்கினார். அவரைத்தொடர்ந்து, டு பிளெஸ்ஸியையும் சாஹல் போல்டாக்கினார். டு பிளெஸ்ஸி 38 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து, களமிறங்கிய டுமினியை குல்தீப் ஆட்டமிழக்கச் செய்ய அந்த அணி 89 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதையடுத்து, மில்லர் மற்றும் பெலுவாயோ இணை மீண்டும் அணியின் இன்னிங்ஸை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சாஹல் மீண்டும் மில்லர் விக்கெட்டை வீழ்த்தி பாட்னர்ஷிப்பை பிரித்தார். அவரைத்தொடர்ந்து, பெலுவாயோவையும் சாஹல் வீழ்த்தினார்.
இதனால், அந்த அணி 158 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில், 200 ரன்களைக் கடப்பதே அந்த அணிக்குச் சவாலாக இருந்தது.

ஆனால், கிறிஸ் மோரிஸ் மற்றும் ரபாடா இணை மீண்டும் அணியை கட்டமைத்து விளையாடியது. இந்த இணை தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோரை 200 ரன்களைக் கடக்கச் செய்தது. ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடி வந்த மோரிஸ் 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, தாஹிரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மோரிஸ், ரபாடா இணை 8-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது.
இதன்மூலம், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகளையும், பூம்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
And here goes Phehlukwayo… If you are out of the line and ball goes in Dhoni's hand… there is no chance left for you to survive..! #SAvIND #INDvSA #SAvIN https://t.co/tkTABHvIri pic.twitter.com/SuFc5Sj4q0
— thinkingdat (@thinkingdat) June 5, 2019