இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணியில் தமிழக ‘ஆல்–ரவுண்டர்’ விஜய் சங்கர் நீக்கப்பட்டு, இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பன்ட், உலக கோப்பையில் அறிமுகமானார். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய வீரர்கள் வழக்கமான நீல நிறத்திற்கு பதிலாக ‘ஆரஞ்சு’ நிற ஜெர்சியில் களமிறங்கினர்.

நல்ல துவக்கம்: இந்திய பவுலர்கள் சொதப்ப, இங்கிலாந்துக்கு ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முகமது ஷமி வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி விளாசிய ஜேசன் ராய், ஹர்திக் பாண்ட்யா வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். அபாரமாக ஆடிய ராய், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 16வது அரைசதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்த போது குல்தீப் ‘சுழலில்’ ஜேசன் ராய் (66) சிக்கினார். இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த பேர்ஸ்டோவ், ஒருநாள் போட்டி வரலாற்றில் தனது 8வது சதத்தை பதிவு செய்தார். ஷமி ‘வேகத்தில்’ பேர்ஸ்டோவ் (111) வெளியேறினார்.
ஸ்டோக்ஸ் ஆறுதல்: கேப்டன் இயான் மார்கன் (1) சோபிக்கவில்லை. ஜோ ரூட் (44) ஓரளவு கைகொடுத்தார். சகால் வீசிய 40வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ஸ்டோக்ஸ், ஒருநாள் அரங்கில் தனது 19வது அரைசதமடித்தார். பட்லர் (20) நிலைக்கவில்லை. கிறிஸ் வோக்ஸ் (7) ஏமாற்றினார். ஸ்டோக்ஸ் (79) நம்பிக்கை தந்தார்.
இங்கிலாந்து அணி, 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 337 ரன்கள் எடுத்தது. பிளங்கட் (1), ஆர்ச்சர் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஷமி, 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் ஆடிய இந்திய அணி 306/5 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 71 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது களத்தில் தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் களத்தில் இருந்தனர். இவர்கள் இருவரும் பவுண்டரிகள் அடிக்காமல் சிங்கிள் அடிப்பதில் ஆர்வம் காட்டினர். இறுதியில் இந்த ஜோடி 31 பந்துகளில் 39 ரன்கள் மட்டும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தது. இவர்கள் இருவரும் 20 சிங்கிள் ரன்கள் அடித்தனர். இது இந்திய ரசிகர்களுக்கு பெறும் ஏமாற்றம் அளித்தது.
இந்த தோல்வி குறித்து பேசிய விராட் கோலி ரிஷப் பண்ட் மட்டும் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து இறுதிவரை ஆடியிருந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது போல் கூறினார்
இதுகுறித்து அவர் கூறியதாவது
ஹர்திக் மற்றும் ரிஷப் பண்ட் விளையாடியபோது எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர். எனினும் அவர்கள் அவுட் ஆன பிறகு சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது” எனத் தெரிவித்தார்.