என்னது.. பும்ரா திரும்ப டீமுக்கு வர இத்தனை நாள் ஆகுமா? – பிசிசிஐ கொடுத்த அப்டேட்!

பும்ரா மீண்டும் இந்திய அணிக்குள் வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா.

டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று வரும் இந்திய அணியில் முதலில் பும்ரா இடம்பெற்று இருந்தார். நடுவில் காயத்தினால் அவர் விலகியதும், தற்போது அவரது உடலநிலையும் பேசுபொருளாகியுள்ளது.

இங்கிலாந்து தொடருக்கு பின், பும்ராவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தார். ஆசியகோப்பைக்கு பிறகு குணமடைந்து விட்டார் என அறிவிப்பு வந்ததால், டி20 உலக கோப்பையிலும் இடம் கொடுக்கப்பட்டிருந்தது.

உலககோப்பைக்கு நேரடியாக பங்கேற்பது சரிவராது என்பதால் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடன் அவருக்கு டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதுவே அவருக்கு வினையாக மாறியது என்று கூறலாம்.

ஆஸ்திரேலியா அணியுடன் டி20 தொடரை முடித்துவிட்டு தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, முதுகுப் பகுதியில் மீண்டும் வலி ஏற்பட்டு இருக்கிறது. இதனை அணியின் மருத்துவ குழுவினர் பரிசோதித்து இரு தினங்களுக்கு பிறகு அறிக்கை வெளியிட்டனர்.

அதில், “பும்ராவிற்கு காயம் தீவிரமாக இருக்கிறது. அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கிறோம். அவரது காயம் குணமடைய எத்தனை நாட்கள் ஆகும் என்று தற்போது கூற இயலாது. ஆனால் டி20 உலககோப்பையில் அவர் விளையாடுவது சரியாக இருக்காது.” என வெளியிட்டு இருந்தார்கள். இந்த அறிக்கையின் படி, டி20 உலககோப்பைக்காண அணியில் இருந்து விலகுகிறார் என அறிவிப்பு வெளிவந்தது.

டி20 உலககோப்பை தொடர் முடிவு பெற்றவுடன் இந்திய அணி நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுடன் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா கடந்த திங்கட்கிழமை அன்று வெளியிட்டார். இந்த பட்டியலில் பும்ராவின் பெயர் இடம் பெறவில்லை.

இந்நிலையில் பும்ரா மீண்டும் எப்போது இந்திய அணியில் இடம் பெறுவார்? அவரது உடல் நிலைக்கு தற்போது என்ன நிலையில் இருக்கிறது? என பல்வேறு கேள்விகளுக்கு சேத்தன் சர்மா பதிலும் கொடுத்திருக்கிறார்.

“பும்ரா இந்திய அணிக்கு மிக முக்கியமான வீரர். அவர் உடல்நிலையை முன்புபோல எளிதாக எடுத்துக் கொள்ளாமல், தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறோம். அவசரம் காட்டாமல் மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.

உலககோப்பைக்கு அவர் வேண்டும் என்பதற்காக அவசரம் காட்டியது தவறுதலாக முடிந்து விட்டது. ஆகையால் இம்முறை அதுபோன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்கிறோம். தற்போது வரை அவர் எப்போது குணமடைவார் என்று கூற இயலாது. பும்ரா உடல்நிலை பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்த தொடர்களுக்கு முன்பு வெளிவரும்.” என்று கூறினார்.

Mohamed:

This website uses cookies.