தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியை சந்தித்தது. 2-வது டெஸ்டில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் 2-1 என முன்னிலையில் உள்ளது. கடந்த 8 வருடத்திற்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்து பெற்ற முதல் இன்னிங்ஸ் வெற்றி இதுவாகும். இந்த வெற்றி அந்த அணிக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்த உத்வேகத்துடன் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதே இலக்கு என கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியை போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தென் ஆப்பிரிக்க அணி தன் 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் தென் ஆப்பிரிக்க இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் மஹராஜ் அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்தார். 106 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் இதில் அடங்கும்.
இந்த இன்னிங்ஸின் போது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்து வீச வந்த போது ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விளாசினார் மஹராஜ், இதோடு இந்த ஓவரில் பை ரன்களாக 4 ரன்கள் வந்து சேர மொத்தம் 28 ரன்களைக் கொடுத்தார் ஜோ ரூட்.
இன்னிங்ஸின் 82வது ஓவரை ரூட் வீச முடஹ்ல் 3 பந்துகளை மஹராஜ் பவுண்டரிக்கு பறக்க விட்டார், அடுத்த இரண்டு பந்துகள் மிட் விக்கெட் பவுண்டரிக்கு சிக்சராக காணாமல் போனது, 24 ரன்கள் மட்டையில் வர 4 ரன்கள் கூடுதலாக பை ரன்களாக வந்தது மொத்தம் 28 ரன்கள் ஒரே ஓவரில் விளாசப்பட்டது. ஜோ ரூட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் பிரையன் லாரா, ஆஸி.யின் ஜார்ஜ் பெய்லி ஆகியோர்களும் 28 ரன்களை ஒரே ஓவரில் விளாசினர், ஆனால் இவர்கள் ரன்கள் அனைத்தும் மட்டையில் வந்தது.
இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது. அடுத்த டெஸ்ட் போட்டி ஜனவரி 24ம் தேதி ஜொஹான்னஸ்பரில் நடைபெறுகிறது.