இந்திய அணி வலிமையுடனும், உறுதியுடனும் மீண்டு வரும் என்று ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை முற்றிலும் சோபிக்கவில்லை.
முதல் இன்னிங்சில் 209, இரண்டாவது இன்னிங்சில் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதுவும் முதல் இன்னிங்சில் 92 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஹர்திக் பாண்ட்யா தனது அதிரடியாக ஆட்டத்தால் 93 ரன்கள் குவித்ததால் 209 என்ற கௌரவமான ரன்னை எட்டியது. இரண்டாவது இன்னிங்சில் 208 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்ட முடியாது தோல்வியைத் தழுவியது.
தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவின் முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. மேலும் வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றிகளை இந்திய அணி வெற்றி பெற்றதில்லை என்ற விமர்சனமும் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்திய அணி வலிமையுடனும், உறுதியுடனும் மீண்டு வரும் என்று ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாண்ட்யா தனது ட்விட்டரில், “முதல் டெஸ்ட் முழுவதும் ரசிகர்கள் அளித்த ஆதரவும் வாழ்த்தும் மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்பாராதவிதமாக நாங்கள் ஆட்டமிழந்துவிட்டோம். நாங்கள் மீண்டும் வலிமையுடனும், உறுதியுடனும் திரும்பி வருவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.