டி20 டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட் வீரர் என்ன ஆனார்? ஏன் எடுக்கப்படவில்லை? – கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர்!

காயம் காரணமாக டி20 அணியில் இருந்து விலகி இருந்த ஹர்ஷல் பட்டேல் நிலைமை இப்போது என்னவாக இருக்கிறது? ஏன் அவர் நியூசிலாந்து டி20 தொடரில் எடுக்கப்படவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி படுமோசமாக செயல்பட்டது. அதன் பிறகு அணியில் செய்யப்பட்ட சில மாற்றங்களில் ஹர்ஷல் பட்டேல் டி20 அணிக்குள் எடுத்துவரப்பட்டார். இவருக்கி நிறைய வாய்ப்புகளும் அவருக்கு கொடுக்கப்பட்டு வந்தது.

 

ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் ஹர்ஷல் பட்டேல், டெத் ஓவர்களில் அபாரமாக செயல்பட்டு ரன்களை கட்டுப்படுத்தி முக்கியமான விக்கெட்டுககையும் வீழ்த்தினார். இந்திய அணியிலும் இவரது செயல்பாடு நன்றாகவே இருந்தது.

2021ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு, 21 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக விளையாடவில்லை. அதன் பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிலும் தேர்வு செய்யப்பட்டார்.

 

டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காத இரண்டு வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார். டி20 உலகக்கோப்பை முடிந்த பிறகு நடைபெற்ற நியூசிலாந்து டி20 தொடர் மற்றும் இலங்கை அணியுடனான டி20 தொடர் இரண்டிலும் தலா ஒரு போட்டிகள் மட்டுமே விளையாடினார். தற்போது இந்தியாவில் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில், “மீண்டும் இவருக்கு காயம் ஏற்பட்டுவிட்டாதா? காயம் இருந்தால் அதன் தற்போதைய நிலை பற்றி ஏன் இன்னும் வெளியில் கூறவில்லை? ஆஸ்திரேலியா டி20 தொடருக்கு பிறகு அவரை எந்தவித போட்டிகளிலும் பார்க்க முடியவில்லையே ஏன்?.” என ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

மேலும் யூடியூப் சேனல் ஒன்றிற்கு ஆகாஷ் அளித்து பேட்டியில், “இப்படி காயம் காரணமாக வெளியேறும் வீரர்கள் குறித்து எந்தவித அறிவிப்புகளும் சரியாக வருவதில்லை. குறிப்பாக பும்ரா பற்றியும் எதுவும் வெளிப்படையாக கூறப்படுவது இல்லை. டி20 ஸ்பெசலிஸ்ட் என உள்ளே எடுத்துவரப்பட்ட ஹர்ஷல் பட்டேல் பற்றிய விபரங்களும் என்னவென்று தெரியவில்லை. இதுதான் பிசிசிஐ வீரர்களை நடத்தும் விதமா?.” என்று கேள்வி எழுப்பினார்.

சமீபகாலமாக இந்திய அணிக்குள் காயம் காரணமாக வெளியேறிய வீரர்களுக்கு பதிலாக உள்ளே எடுத்துவரப்பட்ட இளம் வீரர்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்துவருகிறது. மாற்றாக வந்த வீரர்களை அணி நிர்வாகம் மாற்றுவதற்கு விரும்பவில்லை என்கிற தகவல்களும் வருகின்றன.

Mohamed:

This website uses cookies.