இப்படிப்பட்ட வீரரை வங்கதேச தொடருக்கு எடுக்காமல், என்ன மாதிரியான அணியை தேர்வு செய்துள்ளீர்கள் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக தேர்வுக்குழுவை சாடியுள்ளார்.
தற்போது நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை விளையாடி வரும் இந்திய அணி அதனை முடித்த பிறகு வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி முன்னமே அறிவிக்கப்பட்டுவிட்டன.
நியூசிலாந்து தொடரில் விளையாடி வரும் இந்திய அணியில் இருந்து வெறும் ஆறு வீரர்கள் மட்டுமே வங்கதேச தொடரில் பங்கேற்கின்றன. சிறந்த பார்மில் இருக்கும் சுப்மன் கில், மிக குறைவான வாய்ப்புகள் பெற்று வரும் சஞ்சு சாம்சன் மற்றும் தீபக் ஹூடா, இடைவிடாமல் விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் சஹல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் வெளியேற்றப்பட்டு இருப்பது கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் வங்கதேச மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சிறப்பாக எடுபடும்.
சுப்மன் கில் வெளியேற்றப்பட்டதை கடுமையாக விமர்சித்திருக்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. அவர் கூறுகையில், “சுப்மன் கில் தற்போது இந்திய அணியில் அபாரமான பார்மில் இருக்கிறார். டி20 உலககோப்பை அணியிலும் அவரை எடுக்கவில்லை. நியூசிலாந்து டி20 அணியிலும் அவரை எடுக்கவில்லை.
தொடர்ச்சியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இவருக்கு என்ன அழுத்தம் இருக்கப்போகிறது என்று நினைத்து வங்கதேச தொடரில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.
டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடனான டி20 தொடரில் ஓய்வில் கில் இருந்தார். மேலும் டி20 உலககோப்பை தொடரின் போதும் ஓய்வில் இருந்தார். இவரை வெளியேற்றியது அதிர்ச்சியாக இருக்கிறது.
மேலும் தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் குறைந்த வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அவர்களும் அதிக அழுத்தத்தில் இல்லை என்பதால் வங்கதேசம் ஒருநாள் தொடரில் விளையாட வைத்துப்பார்க்கலாம். ஆனால் அவர்களையும் வெளியே அனுப்பிவிட்டனர். இதுவும் என்ன மாதிரியான அணுகுமுறை என்று புரியவில்லை. மொத்தத்தில் வீரர்களை எடுக்க வேண்டுமே என்ற மெத்தனத்தில் எடுத்தது போல தெரிகிறது.” என்று கடுமையாக சாடினார்.