வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக, இந்திய அணியின் நான்காம் நிலை பேட்ஸ்மேன் யார் என்ற நீண்டகால சிக்கலுக்குத் தீர்வு கிடைத்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் எண்ணுகின்றனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணி அசைக்க முடியாத அணியாக திகழ வேண்டுமென்றால் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை வலிமையானதாக இருப்பது அவசியமாகும். நான்காம் நிலையில் பேட்டிங் செய்பவர் அவ்வளவு சீக்கிரம் விக்கெட்டை இழக்கதவராகவும், தேவைப்படும் நேரத்தில் அடித்து ஆடுபவராகவும் இருக்க வேண்டும். இதைவிட முக்கியமாக ஆஸ்திரேலியாவின் மைக் ஹஸ்ஸி, யுவ்ராஜ் சிங் போல ஒரு இன்னிங்சைக் கட்டமைக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
2011 இல் இந்தியா உலகக்கோப்பையை வென்றதற்கு மிடில் ஆர்டரில் வேகத்துடன் சேர்த்து விவேகத்தையும் காட்டிய யுவ்ராஜ் சிங் தான் காரணமென்பதை மறுத்துவிட முடியாது, மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியதால் தான் 2011க்குப் பிறகான எந்த உலககோப்பைத் தொடரிலும் இந்தியா அணியால் சாதிக்க முடியவில்லை என்கிற விமர்சனம் தொடர்ந்து இருந்து வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மணிஷ் பாண்டே, கே.எல்.ராகுல், அம்பாதி ராயுடு, விஜய் சங்கர் என்று பலரை முயற்சித்துப் பார்த்தும் கோலி தலைமையிலான இந்திய அணியால் நான்காம் நிலையில் விளையாடுவதற்கான நிரந்தர வீரரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில். தனது புயல் வேக பேட்டிங்கின் மூலம் இந்தியத் தேர்வுக் குழுவினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.

மும்பை கிரிக்கெட்டின் வார்ப்பு என்பதால் கவாஸ்கர், சச்சின் போல வேகப்பந்து வீச்சை அநாயசமாக துவம்சம் செய்யும் ஷ்ரேயாஸ் ஐயர். தனது லாவகமான ஃபுட் வொர்க்கின் மூலம் சுழற்பந்து வீச்சையும் வெளுத்து வாங்குகிறார். பதட்டமான சூழ்நிலைகளை தோனி போல கூலாக கையாளும் ஷ்ரேயாஸ் ஐயர் துடிப்பான ஃபீல்டிங்கில் கோலி, ஜடேஜாவிற்கு நிகரானவர்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நான்காம் நிலையில் ஆடுவாரெனக் கூறப்பட்ட நிலையில், ஐந்தாம் நிலையில் விளையாடுவதற்குத் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான்காம் நிலையில் இறங்கிய ரிஷாப் பந்த் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் வீணடித்ததால், நிரந்தரமாக ஷ்ரேயாஸ் ஐயரையே நான்காம் நிலையில் ஆடவைக்க வேண்டுமென்கிறார்கள் சுனில் கவாஸ்கர், ரிக்கி பாண்டிங் போன்ற கிரிக்கெட் ஜாம்பாவான்கள்.
24 வயதே ஆன ஸ்ரேயாஸ் ஐயருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால், யுவராஜ் சிங்கைப் போல ஒரு தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக வருவார் என்கிறார் கங்கூலி. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியை வழிநடத்திய அனுபவமும் இருப்பதால், கோலிக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பொறுப்பு ஷ்ரேயாஸ் ஐயரின் கைக்கு வர வாய்ப்புள்ளது என கூறுகிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.