தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டர்பன் நகரில் பகலிரவாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3, யுவேந்திர சாஹல் 2, புவனேஷ்வர், பும்ரா தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து ஆடிய இந்தியா 45.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய தரப்பில் கோலி-ரஹானே ஜோடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. கோலி-ரஹானே ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தது. ரஹானே 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 79 ரன்களில் வெளியேறினார். கோலியும் 119 பந்துகளில் 10 பவுண்டரிகள் உள்பட 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் முதல் பாதியில் பேட்டியளித்த சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், ஒரு மாத இடைவெளிக்கு மீண்டும் விளையாட வந்துள்ளேன். நல்லவிதமாக உணர்கிறேன். இந்த விக்கெட் பேட்டிங்குக்குச் சாதகமானது. முதலில் நிதானமாக ரன் எடுக்கமுடிந்தது. அதன்பிறகு பேட்டிங்குக்குச் சாதகமாக மாறிவிட்டது. இங்கு உற்சாகமாக பெளலிங் செய்கிறேன்.

வீசும் பந்தின் வேகத்தன்மையையும் நீளத்தையும் தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்கிறேன். சுழலும் பந்துகளும் ராங் அன் வகைப் பந்துகளும் இந்த ஆடுகளத்துக்குப் பொருத்தமானவை. 269 என்பது நல்ல ஸ்கோர். இந்த ஸ்கோரை 45-46 ஓவர்களில் எட்டிவிடுவோம் என்று கூறினார்.
அதேபோல இந்திய அணி 46-வது ஓவரில் இலக்கை எட்டிவிட்டது. தோனி, பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்தார். அவர் 4, பாண்டியா 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் ஆட்டத்தின் முடிவு குறித்த குல்தீப் யாதவின் கணிப்பும் சரியாக அமைந்தது.