பெண்கள் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் பெண்கள் உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நாளை இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து – இந்தியா பலப்ரீட்சை நடத்துகின்றன.
இந்த தொடரில் தொடக்கம் முதலே இந்திய வீராங்கனைகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
2005-ம் ஆண்டுக்குப்பின் தற்போது 2-வது முறையாக இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய வீராங்கனைகளின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டும் வகையில் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அத்துடன், அணியில் இடம்பெற்றுள்ள பிற நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.