இளம் கிரிக்கெட் வீரரின் உயிரை காக்க உதவும் ஆர்.பி சிங்
இளம் கிரிக்கெட் வீரரின் உயிரை காக்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி சிங் உதவி செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரும், வேகப்பந்து வீச்சாளருமான ஆர்.பி சிங் தற்போது தனக்கான வாய்ப்பு கிடைக்காமல் உள்ளூர் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் தன்னுடன் செல்ஃபி எடுக்க வற்புறுத்திய ரசிகர் ஒருவரின் செல்போனை பிடுங்கி மைதானத்தில் எறிந்தது, கோவத்தில் ஸ்டெம்ப்பை எட்டி உதைத்து பறக்கவிட்டது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி கோவக்காரர் என்ற பெயரெடுத்த ஆர்.பி சிங்கின் மற்றொரு முகமும் தற்போது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஆர்.பி சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆதித்யா பதாக் என்னும் இளம் கிரிக்கெட் வீரரின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் அவர் தற்போது டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஆர்.பி சிங் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார்.
ஆதித்யா பதாக்கின் மருத்துவ சிகிச்சைக்காக ஏழ்மையான அவரது குடும்பம் தங்கள் வசிக்கும் வீட்டை விற்பனை செய்ய திட்ட மிட்டிருந்தனர், ஆனால் ஆர்.பி சிங்கின் உதவியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து ஆதித்யாவின் குடும்பத்திற்கு தற்போது நிறைய உதவிகள் கிடைத்து வருகின்றன. மேலும் ஆர்.பி சிங்கின் இந்த நடவடிக்கைக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆதித்யா பதாக் என்னும் அந்த இளம் கிரிக்கெட் வீரர் 16 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.