ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன் இவர்தான் என தோனியை தாண்டி வேறு ஒருவரை கை காட்டியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான். இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று கோப்பைக்காக மோதி வருகிறது. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களின் பெரும் வரவேற்பினை பெற்ற ஐ.பி.எல் 13 ஆவது சீசனாக இந்த ஆண்டு நடைபெற இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடர் காலவரையறையின்றி பி.சி.சி.ஐ ஒத்திவைத்துள்ளது.
யூசுப் பதான் சுழற் பந்துவீச்சு ஆல் – ரவுண்டராக கடந்த 2008 முதல் ஐபிஎல் அரங்கில் வலம் வந்தார். அவரது சகோதரர் இர்பான் பதான் அண்டர் 19 அணியில் இருந்து நேரடியாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், யூசுப் பதான் ஐபிஎல் போட்டிகளை பிடித்துக் கொண்டார்.
ஐபிஎல் தொடரில் தன் பார்மை நிரூபித்து, இந்திய அணியில் நுழைந்தார் யூசுப் பதான். இந்திய அணியில் பெரிய உயரங்களை தொடாமல் போனாலும் ஐபிஎல் அரங்கில் நம்பிக்கை அளிக்கும் வீரராக வலம் வந்தார். அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
2010இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய போது 37 பந்துகளில் அவர் அடித்த சதம் இன்றும் ஐபிஎல் அரங்கின் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக உள்ளது. சமீபத்தில் அவர் 2008இல் ஷேன் வார்னே ஒரு சாதாரண அணியை ஐபிஎல் கோப்பை வெல்ல வைத்தார் என்பதை சுட்டிக் காட்டினார்.
2008 ஐபிஎல் தொடர் துவங்கப்பட்ட போது மற்ற அணிகள் நட்சத்திர வீரர்களை வளைத்துப் போடுவதில் ஆர்வம் காட்டிய நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிறைய செலவு செய்ய யோசித்து சராசரியான வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்தது.

ஆனால், அவர்கள் ஏலத்தில் வாங்கியதிலேயே சிறந்த அனுபவ வீரர் ஷேன் வார்னே மட்டுமே. அவரையே கேப்டனாக நியமித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அவர் அந்த சாதாரண அணியை வழிநடத்தி 2008இல் ஐபிஎல் கோப்பை வெல்ல வைத்தார்.
அதை நினைவு கூர்ந்த யூசுப் பதான், மூன்று ஆண்டுகள் ஷேன் வார்னேவுக்கு கீழ் ஆடினேன். அவர் போட்டிக்கு முன்பே பேட்ஸ்மேனை எப்படி வீழ்த்த வேண்டும் என வழி காட்டுவார். அதன் நாங்கள் செய்து அவர் கூறியது போலவே பேட்ஸ்மேனை வீழ்த்துவோம் என்றார்.
மேலும், பெரிய வீரர்கள் இல்லாத நிலையிலேயே அவர் எங்கள் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்று கோப்பை வெல்ல வைத்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ளூர் வீரர்கள் அதிகமாகவும், வெளிநாட்டு வீரர்கள் குறைவாகவும் இருந்தனர். குறைந்த வாய்ப்புகளை கொண்டு கோப்பை வெல்ல அவரைப் போன்ற கேப்டனால் தான் முடியும் எனக் கூறினார் யூசுப் பதான்.

யூசப் பதானின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ராஜஸ்தான் அணிக்காக அவர் ஆரம்பகாலகட்டத்தில் விளையாடியதால் ஷேன் வார்னேவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எந்த தவறும் இல்லை என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறிவருகினறனர். யூசப் பதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக 37 பந்துகளில் அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.