யோ-யோ உடற்தகுதி சோதனையில் 3 முறை தோல்வியடைந்து கடைசியில் டிடம்பரில் தேறிய யுவார்ஜ் சிங், தனது ஆதர்ச நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அஜித் அகார்க்கருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படம் வைரலாகி, கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.
புத்தாண்டுக்கு முந்தைய விருந்து நிகழ்ச்சியில் மூவரும் கலந்து கொண்டது போல் தெரிகிறது. யுவராஜ் சிங் கறுப்புச் சட்டை சிகப்புத் தொப்பியுடன் காட்சியளிக்க சச்சின் டெண்டுல்கர் பளபளக்கும் சில்வர் நிற தொப்பியில் இருந்தார்.
இந்தப் பதிவை இட்டவுடன் ரசிகர்கள் தங்கள் பின்னூட்டத்துடன் குவிந்தனர். இந்தப் புகைப்படம் தனது சிறுபிராய கிரிக்கெட் நினைவுகளைக் கிளறுவதாக ஒரு பயனாளர் குதூகலம் காண்பித்துள்ளார்.
மேலும் பல ரசிகர்களும் யுவராஜ் சிங் மீண்டும் நீலச்சீருடையில் இந்தியாவுக்காக ஆட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
யுவராஜ் சிங் இது குறித்து கூறியபோது, “தினமும் மீண்டும் அணிக்கு வருவதற்காகத்தான் உழைத்து வருகிறேன், 2019 வரை ஆடலாம் என்று எண்ணியுள்ளேன் அதன் பிறகு முடிவெடுப்பேன். யோ-யோ டெஸ்ட் போட்டியில் 3 முறை தோல்வி கண்டேன், கடைசியில் தேறினேன், 17 ஆண்டுகளாகியும் தோல்வி அடைந்து கொண்டிருக்கிறேன், வாழ்க்கையில் பல உயரங்களை, தாழ்வுகளை கண்டிருக்கிறேன்.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமெனில் தோல்விகள் அவசியம். தோல்விகள்தான் நம்மை வலுவாக மாற்றும்” என்றார்.
யுவராஜ் சிங் 40 டெஸ்ட் போட்டிகள் 304 ஒருநாள் போட்டிகள் 58 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.