ஐ.பி.எல்., தொடரில் நட்சத்திர வீரர்களாக வலம் வந்த கெய்ல், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர், வரும் ஏலத்தில் விலை போவது சந்தேகமாக உள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி-20’ தொடர், கடந்த 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. இதன் 11 வது ஆண்டில் வீரர்களுக்கான ஏலம், முழு அளவில் நடக்கவுள்ளது. மொத்தம் 18 வீரர்கள் மட்டும் தக்க வைக்கப்பட்ட நிலையில், வரும் 27, 28ல் நடக்கும் ஏலத்தில் (பெங்களூரு) மொத்தம் 578 பேர் (360 இந்திய வீரர்கள்) பங்கேற்கின்றனர். இதில் 182 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இம்முறை அஷ்வின், ரகானே, பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் நட்சத்திர வீரர்களாக (துவக்க விலை ரூ. 2 கோடி) இடம் பெற்றுள்ளனர். இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள விளாசல் மன்னன் கெய்ல், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரை எந்த அணிகளும் வாங்காது எனத் தெரிகிறது.
துவக்கத்தில் கோல்கட்டா அணியில் இடம் பிடித்த கெய்ல், 2011 ஏலத்தில் விலை போகவில்லை. பின் பெங்களூரு அணி மாற்று வீரராக வாங்கியது. இதுவரை இத்தொடரில் 265 சிக்சர் அடித்து முதலிடத்தில் உள்ள கெய்ல் (101 போட்டி, 3626 ரன், அதிகபட்சம் 175 ரன்), சமீபத்தில் தொடர்ந்து சொதப்புகிறார். இம்முறை யாராவது வாங்கினால், இவருக்கு அதிர்ஷ்டம் தான்.
யுவராஜ் எப்படி
கடந்த 2007, 2011 உலக கோப்பை ஹீரோ யுவராஜ் சிங். பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்தவர். இங்கிருந்து விலகிய பின், பல அணிகளுக்கு சென்றார். கடந்த 2017 ஐ.பி.எல்., தொடரில் ஏமாற்றினார் (12ல், 252 ரன்). 120 போட்டியில் 2587 ரன்கள் (36 விக்.,) எடுத்த யுவராஜ் சிங், இம்முறை விலை போவது சிரமம் தான்.

Photo by Vipin Pawar – Sportzpics – IPL
ஹர்பஜன் சந்தேகம்
மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாடிய ‘சுழல்’ வீரர் ஹர்பஜன் சிங், 136 போட்டியில் 127 விக்கெட் சாய்த்தார். மோசமான ‘பார்ம்’ காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட இவர், அதே காரணத்தால் மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசவில் 11 போட்டியில் 8 விக்கெட் மட்டும் கைப்பற்றிய இவருக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை.
மலிங்கா அவ்ளோதான்
மும்பை அணியில் முக்கிய துருப்புச் சீட்டாக இருந்தவர் ‘யார்க்கர்’ மலிங்கா (110ல், 154 விக்.,). தற்போது துரும்பாக கூட மதிக்கப்படுவது இல்லை. தனது இலங்கை அணியில் கூட இவரை சேர்க்க மறுக்கின்றனர். பும்ரா வந்து விட்டதால், மலிங்கா இடம் சந்தேகமே.
இதேபோல, வேகப்புயல் ஸ்டைன் (90ல், 92 விக்.,), ‘ஆல் ரவுண்டர்’ யூசுப் பதான் (149ல், 2904, 42 விக்.,), வாட்சன் (102ல், 2622, 86 விக்.,) உள்ளிட்டோரும் ஏலத்தில் விலைபோவது சந்தேகம் தான்.
ஐ.பி.எல்., நேரம் மாற்றம்
ஐ.பி.எல்., தொடரின் 11வது சீசன், வரும் ஏப்ரல் 7ம் தேதி மும்பையில் துவங்குகிறது. மே 27ல் பைனல் இங்கு தான் நடக்கும். மாலை 4:00 மணி போட்டிகள், இனிமேல் 5:30 மணிக்கு துவங்கும். இதேபோல, இரவு 8:00 மணி போட்டிகள், ஒரு மணி நேரம் முன்னதாக 7:00 மணிக்கு துவங்கும்.