ஆஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சர், ஸ்டீவ் ஸ்மித்தின் தலையைப் பதம் பார்த்தது. இந்த சம்பவத்தால் ஸ்மித், ரிட்டையர்-ஹர்ட் ஆக வேண்டியிருந்தது. ஸ்மித், தடுமாறி கீழே விழுந்தபோது அவரை அலட்சியப்படுத்தினார் ஆர்ச்சர். இதனால் கோபமான, பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், ட்விட்டரில் தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார். அக்தரின் ரியாக்ஷனை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத யுவராஜ், அதை கேலி செய்யும் விதத்தில் ரிப்ளை கொடுத்துள்ளார்.
ஆஷஸ் தொடரில் தொடர்ந்து 3வது சதம் அடிக்கும் முனைப்பில் இருந்தார் ஸ்மித். 80 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருந்த ஸ்மித்திற்கு ஆர்ச்சர் தொடர் பவுன்சர்கள் வீசிக் கொண்டிருந்தார். அதிலும் ஒரு டெலிவரி 92.4 மைல்ஸ் வேகத்தில் ஸ்மித்தை நோக்கி வந்தது. அதை சரியாக ஆடத் தவறிய ஸ்மித், தலையைத் திருப்பினார். இதனால், பந்து ஸ்மித்தின் பின் மண்டையில் பட்டது. அடுத்த கணமே ஸ்மித், மைதானத்தில் சுருங்கி விழுந்தார். அவருக்கு மைதானத்திலேயே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவக் குழுக்கள் முதலுதவி கொடுத்தன.
இந்த மொத்த சம்பவத்தில் ஆர்ச்சரின் நடத்தை விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் ஆர்ச்சர், ஆக்ரோஷமாக பந்து வீசினார். ஆனால், ஸ்மித் சுருங்கி விழுந்த பின்னர் ஆர்ச்சர் எள்ளிநகையாடும் வகையில் சிரித்துள்ளார். அவரில் நடத்தைதான் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
சோயப் அக்தர், இச்சம்பவம் குறித்து ட்விட்டரில், “பவுன்சர்கள் என்பது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். ஆனால் பந்தவீசி, அது பேட்ஸ்மேனின் தலையில் பட்டு, அவர் விழ நேர்ந்தால், அவரை அந்த பவுலர் உடனடியாக சென்று பார்க்க வேண்டும். ஸ்மித் வலியில் துடித்துக் கொண்டிருந்தபோது, ஆர்ச்சர் எதுவும் செய்யாதது போல் நடந்து சென்றது சரியில்லை. நான் பந்துவீசிய போது, பேட்ஸ்மேன் மீது பந்து பட்டுவிட்டால் அவரை நோக்கியோடும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அக்தரின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்துள்ள யுவராஜ், “ஆமாம், நீங்கள் உடனே வந்துவிடுவீர்கள். ஆனால், உங்களின் உண்மை வார்த்தைகள், ‘நண்பா நல்லா இருக்கீங்களா… இன்னும் நிறைய பவுன்சர் வரும்’ என்பதுதான்” என்று கேலி செய்யும் வகையில் கருத்திட்டுள்ளார்.
Yes you did ! But your actual words were hope your alright mate cause there are a few more coming ?????
— Yuvraj Singh (@YUVSTRONG12) August 19, 2019