ஓய்வு அறிவிக்கும் முன் ரசிகர்கள் முன்னிலையில் கடைசி போட்டியை ஆடி பிரியாவிடை அளிக்க வாய்ப்புத் தருவதாகவும் ஆனால் யோ-யோ டெஸ்ட்டில் தோல்வியடைய வேண்டும் என்று பிசிசிஐ தன்னிடம் கூறியதாக ஓய்வு பெற்ற யுவராஜ் சிங் இன்று தெரிவித்தார்.
யுவராஜ் சிங் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இது கொஞ்சம் தாமதம்தான். இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு இல்லை என்பது எப்பொழுதே உறுதியாகிவிட்டது. கவுதம் காம்பீருக்கும் இதே நிலைதான் இருந்தது. அவரும் கடந்த டிசம்பரில்தான் ஓய்வை அறிவித்தார். காம்பீரை தொடர்ந்து தற்போது யுவராஜ் சிங்கும் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ். அவரது பேட்டிங்கிற்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். குறிப்பாக அவர் அடிக்கும் மெகா சிக்ஸர்களுக்கு. இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பிராட் பந்துவீச்சில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசியதை ரசிகர்கள் எப்பொழுதும் மறக்கமாட்டார்கள். மிடில் ஆர்டரில் யுவராஜ்-ன் பங்களிப்பு அளப்பரியது. தொடக்கத்தில் முகமது கைஃப் உடனும், கடைசி கட்டத்தில் தோனியுடனும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிறைய போட்டிகளில் விளையாடினார். தோனியுடன் அவர் இணைந்து விளையாடிய 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி சிறப்பானது.
மற்ற சர்வதேச போட்டிகளை காட்டிலும் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் யுவராஜ் சிங்கின் ஆட்டம் களைகட்டும். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் யுவராஜ் சிங்கின் ஆட்டம்தான் கோப்பையை வெல்ல முக்கியமான காரணமாக இருந்தது. 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் யுவராஜ் 362 ரன்கள் குவித்ததுடன் 15 விக்கெட்களையும் சாய்த்தார். அவருக்கு தொடர் நாயகன் விருதும் கிடைத்தது. அந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் 57 ரன்களுடன் 2 விக்கெட்கள் சாய்த்தார்.
இந்நிலையில் ஓய்வு அறிவித்த போது நடைபெற்ற உணர்ச்சிகர செய்தியாளர்கள் சந்திப்பில் யுவராஜ் சிங் கூறும்போது, “யோ-யோ டெஸ்ட்டில் பாஸ் செய்யாவிட்டால் உங்களுக்கு பிரியாவிடை போட்டி அளிக்கிறோம்” என்று பிசிசிஐ தரப்பில் என்னிடம் கூறப்பட்டது” என்றார்.

பிரியாவிடை போட்டி கிடைக்கவில்லை என்பது பெரிய வலிதான் என்று இவரது சமகால அதிரடி வீரர் சேவாக் கூறியிருந்த நிலையில் இவரோ பிரியாவிடை போட்டியெல்லாம் தேவையில்லை என்கிறார்.
“நான் பிசிசிஐ-யில் ஒருவரிடமும் எனக்கு கடைசி பிரியாவிடை போட்டி வேண்டும் என்று நான் கூறவில்லை. நான் நன்றாக ஆடியிருந்தால் மைதானத்தில் ஓய்வு அளித்திருக்க முடியும். நான் ஒரு போதும் கூடுதலாக ஒரு போட்டியை கேட்பவனல்ல, நான் அந்த மாதிரி மனோநிலையில் கிரிக்கெட்டை ஆடியதில்லை.” என்றார் யுவராஜ் சிங்.
இனி யுவராஜ் சிங் பேட்டிங்கைப் பார்க்க வேண்டுமென்றால் 2 அயல்நாட்டு டி20 லீகுகளில் பார்க்கலாம் ஆனால் அதற்கும் பிசிசிஐ ஆட்சேபணையில்லை சான்றிதழ் வழங்க வேண்டும்.