வயசாகிடுச்சுனு ஓரங்கட்டிடாதீங்க… பும்ராஹ்வை விட டி.20 உலகக்கோப்பையில் இவர் தான் முக்கியம்; ஜாஹிர் கான் உறுதி
டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரரான முகமது ஷமிக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஜாஹிர் கான் தெரிவித்துள்ளார்.
டி.20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் துவங்க உள்ளது. சிவம் துபே, ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களின் வருகையால் டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியை இறுதி செய்வதில் பெரிய குழப்பமே நிலவி வருகிறது என்றால் மிகையல்ல.
இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய நிர்வாகமும், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களை டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து படிப்படியாக ஓரங்கட்டி வருகிறது. டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கிவிட்டாலும், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு இடம் கிடைக்குமா இல்லையா என்பது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான ஜாஹிர் கான், டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜாஹிர் கான் பேசுகையில், “டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது சிராஜிற்கும், பும்ராஹ்விற்கு இடம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அடுத்ததாக அர்ஸ்தீப் சிங்கிற்கு இடம் கொடுக்கப்படலாம், அர்ஸ்தீப் சிங் இடது கை பந்துவீச்சாளர் என்பதால் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படலாம். என்னை பொறுத்தவரையில் முகமது ஷமிக்கும் இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட வேண்டும். முகமது ஷமி முழு உடற்தகுதியுடன் இருந்து ஆடும் லெவனிலும் இடம் பிடித்துவிட்டால் நிச்சயமாக அவர் திருப்புமுனையை ஏற்படுத்த கூடிய வீரராக இருப்பார். அர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் பும்ராஹ் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று தெரிவித்தார்.