தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி, அடுத்த சுற்று வாய்ப்பும் பரி போனது!! 1

 

புரோ கபடி லீக்கில் தெலுங்கு டைட்டன்சிடம் மீண்டும் பணிந்த தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழையும்.

தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி, அடுத்த சுற்று வாய்ப்பும் பரி போனது!! 2

இந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடந்த 107-வது லீக் ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, ரோகித் ராணா தலைமையிலான தெலுங்கு டைட்டன்சை (பி பிரிவு) எதிர்கொண்டது.

 

கட்டாயம் வென்றாக நெருக்கடியுடன் களம் புகுந்த தமிழ் தலைவாஸ் அணியினர் சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் சொதப்பினர். இதில் தொடக்கம் முதலே தெலுங்கு டைட்டன்ஸ் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

தமிழ் தலைவாஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் அஜய் தாகூர் ‘ரைடு’ மூலம் மட்டும் புள்ளிகள் சேகரித்தார். தடுப்பாட்டத்தில் மிகவும் பலவீனமாக காணப்பட்டனர். இரண்டு முறை ஆல்-அவுட் ஆன தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் முதல் பாதியில் எதிராளியை ஒரு முறை கூட மடக்கி பிடிக்கவில்லை. அதே சமயம் எதிராளியிடம் எளிதில் பிடிபட்ட விதம் ரசிகர்களை வெறுப்படையச் வைத்தது.

முதல் பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் 30-15 என்ற புள்ளி கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. 2-வது பாதி தொடங்கிய உடனே மறுபடியும் தலைவாஸ் ஆல்-அவுட் ஆகி பெருத்த பின்னடைவை சந்தித்தது. இந்த சரிவில் இருந்து தமிழ் தலைவாஸ் வீரர்களால் கடைசிவரை நிமிரவே முடியவில்லை.தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி, அடுத்த சுற்று வாய்ப்பும் பரி போனது!! 3

ஒரு தரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 58-37 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை பந்தாடியது. இந்த சீசனில் தமிழ் தலைவாசின் மோசமான தோல்வி இதுவாகும்.

ஏற்கனவே தெலுங்கு டைட்டன்சுக்கு எதிராக தமிழ்தலைவாஸ் 2 முறை தோற்று இருந்தது. மீண்டும் அவர்களிடம் மண்ணை கவ்வி இருக்கிறார்கள். ‘ரைடு’ வகையில் தலைவாஸ் அணியில் அஜய் தாகூர் 20 புள்ளிகளும், டைட்டன்ஸ் அணியில் நட்சத்திர ஆட்டக்காரர் ராகுல் சவுத்ரி 16 புள்ளிகளும் எடுத்தனர்.

சொந்த ஊரில் 4-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் இங்கு இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 17-வது லீக்கில் விளையாடிய தமிழ் தலைவாசுக்கு இது 11-வது தோல்வியாகும்.

மேலும் 4 வெற்றியும், 2 ‘டை’யும் கண்டுள்ள தமிழ் தலைவாஸ் தனது பிரிவில் 34 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த தோல்வியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. 20-வது லீக்கில் ஆடிய தெலுங்கு டைட்டன்சுக்கு இது 7-வது வெற்றியாகும்.

தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி, அடுத்த சுற்று வாய்ப்பும் பரி போனது!! 4

தோல்வி குறித்து தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் எங்களது தடுப்பாட்டம் கைகொடுக்கவில்லை. இந்த தொடரின் சிறந்த வீரர்களில் ஒருவராக ராகுல் சவுத்ரி (தெலுங்கு டைட்டன்ஸ்) விளங்குகிறார்.

அவரை எங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது. அடுத்த ஆட்டத்தில் நாங்கள் உத்தரபிரதேச அணியை வீழ்த்தியாக வேண்டும். மேலும் சில முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமைந்தால், அடுத்த சுற்றுக்கான சிறிய வாய்ப்பு இருக்கிறது’ என்றார்.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 42-22 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை தோற்கடித்து 11-வது வெற்றியை சுவைத்தது.

சென்னையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் மும்பை-அரியானா ஸ்டீலர்ஸ் (ஏ பிரிவு, இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ்-உத்தரபிரதேச யோத்தா (பி பிரிவு, இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *