இந்திய அணியின் அடுத்த இலக்கு உலக கோப்பை தானாம்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டித்தொடரில், 19 வயதான தீப்தி சர்மா அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சிறப்பாக மட்டை வீசினார்.
முதல் விக்கெட்டாக களம் இறங்கிய தீப்தி ஷர்மாவும், பூனம் ராவத்தும் புதிய சாதனையை நிகழ்த்தினார்கள். இருவரும் இணைந்து 320 ரன்களை குவித்தனர். தீப்தி 188 ரன்களும், பூனம் 109 ரன்களும் எடுத்தனர்.
மூன்று மாதங்களுக்கு முன்பு, ஐசிசி பெண்கள் உலகக் கோப்பைப் போட்டிக்காக இங்கிலாந்தில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் இந்திய அணி தகுதிபெற்றது.
அதைத் தொடர்ந்து சில வாரங்களில் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீராங்கனை என்ற சிறப்[பை ஜூலன் கோஸ்வாமி பெற்றார். அதன்பிறகு, ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய தீப்தியும், பூனமும் புதிய சாதனையை நிகழ்த்தினார்கள்.
அதேபோல், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக சாதனை நிகழ்த்திய பூனம் ராவத் தனது முதல் சதத்தை அடித்தார். அந்தப் போட்டியில் 109 ரன்கள் எடுத்த பூனம் காயத்தினால் வெளியேறினார் என்பதை விட, பிற வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் பெவிலியனுக்கு திரும்பினார் என்றே சொல்லலாம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஞாயிறன்று நடைபெற்ற போட்டியில் பூனம் 70 ரன்கள் குவித்தார்.
தீப்தி மற்றும் தன்னைப் போன்ற இளைஞிகளின் வருகையால் மிதாலி ராஜ் போன்ற மூத்த வீராங்கனைகள் மீதான அழுத்தம் குறைந்திருப்பதாக பூனம் கருதுகிறார்.
“மிதாலி ராஜ் சிறந்த ஆட்டக்காரர், பல ஆண்டுகளாக இந்திய மகளிர் அணியை நன்றாக வழி நடத்திச் செல்லும் அவர், பிறரின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க வேண்டிய அழுத்தம் இருந்தது”. என்கிறார் பூனம்.
கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இந்திய ஆண்கள் அணி அந்த நிலைமையை மாற்றுவதில் வெற்றிபெற்றது.
இனி இந்திய பெண்கள் அணி, ஆடவர் அணியைப் போல் தனக்கென கிரிக்கெட்டில் ஒரு சிறந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக முடியும் என்கிறார் பூனம்.
“ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னணியில் இருந்தாலும், இந்திய அணி மிகவும் பின்தங்கிய நிலையில் இல்லை, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மாற்றம் வந்துள்ளது. திட்டமிட்டு செயல்பட்டால் முதலிடத்தை பிடிப்பது சாத்தியமே. திட்டமிடுதல் இல்லையெனில், பெரிய போட்டிகளில் வெற்றி பெறமுடியாது.”
பூனமும், தீப்தியும், இந்தியாவின் சிறந்த ஃபீல்டர்களில் முக்கிய இடம் பிடித்துள்ளனர். டைவிங் அடித்தோ, சறுக்கியோ பந்தை பிடிக்க பெண் கிரிக்கெட்டர்கள் தயங்கிய காலம் மலையேறிவிட்டது என்கிறார் தீப்தி.
“டைவ் கற்றுக் கொள்ளவேண்டும், அல்லது ஸ்லைட் கற்றுக் கொள்ளவேண்டும் என்று பெண் கிரிக்கெட்டர்கள் தானாகவே முன் வந்து கேட்கும் காலம் இது. இப்போது பெண்கள் பயப்படுவதில்லை, முழு முயற்சியுடன் களத்தில் இறங்கி போராடத் தயாராக இருக்கிறார்கள்” என்கிறார் தீப்தி.