“வெளிநாட்டில் புலி, இந்தியாவில் எலி” கேள்விகேட்ட பத்திரிக்கையாளரிடம் கோபப்பட்ட ரஹானே!
வெளிநாட்டில் ஆடும் அளவிற்கு இந்திய மைதானங்களில் ஆடுவதில்லையே என்கிற கேள்விக்கு கோபமாக பதிலளித்துள்ளார் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிவரும் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ரஹானே அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அப்போது நிருபர் ஒருவர், “உங்களது செயல்பாடு வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக இருப்பதைப்போல் இந்திய மைதானங்களில் இல்லையே?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு சற்று கோபமடைந்தவாறு ரஹானே, “இந்த கேள்வியை நான் இங்கு எதிர்பார்த்ததுதான். நான் அளித்திருக்கும் ரன்களை வைத்து இங்கு நான் பேச விரும்பவில்லை. இருப்பினும் அணிக்கு தேவையான சமயத்தில் நான் ரன் குவித்து வருகிறேன். எந்த மாதிரியான சூழலில் இந்திய மைதானங்களில் ரன்களை அடித்திருக்கிறேன் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அந்த தரவுகளை கவனித்திருந்தால், நீங்கள் இந்த கேள்வியை எழுப்பி இருக்க மாட்டீர்கள். ஆகையால் உரிய முறையில் புள்ளிவிவரங்களை தெரிந்து வைத்துக்கொண்டு கேள்விகளை எழுப்புங்கள்.” என சற்று ஆக்ரோசமாக பதிலளித்தார்.
மேலும் ஒரு நிருபர், “இங்கிலாந்து அணியுடனான தொடரில் 5 இன்னிங்ஸ்களில் வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறீர்கள். இதற்கு நீங்கள் என்ன பதில் கூற விரும்புகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த, “ரஹானே நான் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுபவர் அல்ல. இந்திய அணியின் தேவைக்கு ஏற்றவாறு விளையாடுகிறேன். முதல் போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் அணிகாக அரைசதம் அடித்தேன். அதன் பிறகு நான் மட்டுமல்ல மற்ற வீரர்களும் பேட்டிங்கில் திணறி வருகின்றனர். ரோகித் சர்மா நல்ல துவக்கம் அமைத்துக் கொடுக்கிறார். இது அணிக்கு பக்கபலமாக அமைகிறது. இந்திய அணியின் வெற்றி மட்டுமே எனது இலக்கு.” என பதிலளித்தார்.
ரஹானே இதுவரை இந்திய துணைக்கண்டத்தில் 30 டெஸ்ட் போட்டிகளில் 47 இன்னிங்ஸ் விளையாடி 1,578 ரன்கள் அடித்துள்ளார். அதில் இவரது சராசரி 36.69 ஆகும். 8 அரைசதங்கள் மற்றும் 4 சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக 188 ரன்கள் அடித்துள்ளார்.
வெளிநாட்டு மைதானங்களில் இதுவரை 42 டெஸ்ட் போட்டிகளில் 75 இன்னிங்ஸ் விளையாடி 2,978 ரன்கள் சேர்த்துள்ளார். அதில் இவரது சராசரி 44.44 ஆகும். 15 அரைசதங்களும் 8 சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 147 ரன்கள் அடித்துள்ளார்.