2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ரசிகர்களிடையே இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்கு இருக்கும் வரவேற்பு உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது வெளி கண்டங்களிலும் ஐபிஎல் தொடருக்கு வரவேற்பு முன்பைவிட பலமடங்கு அதிகரித்துள்ளன. ஆதலால், அனைத்து நாடுகளில் இருந்தும் வீரர்கள் ஐபிஎல்-இல் ஆட விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் நடந்து முடிந்த 2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில், பரம எதிரிகளான சென்னை மற்றும் மும்பை இரு அணிகளும் மோதிக் கொண்டன. கிட்டத்தட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதும் அளவிற்கான ஒரு பரபரப்பு நிலவியது. இதற்கு முன்பு இரு அணிகளும் தலா மூன்று முறை கோப்பையை வென்றிருந்தன. இம்முறை வெல்லும் அணி நான்காவது முறையாக கோப்பையை தட்டிச் சென்று ஐபிஎல் உலகில் தனி பலம் கிடைக்கும் என்பதால் போட்டியில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் நடப்புச் சாம்பியன் சென்னையை வீழ்த்தி மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது.
இப்போட்டியை மட்டும் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் சேர்த்து சுமார் ஒன்றரை கோடி மக்கள் கண்டு களித்துள்ளனர். இது மற்ற நாடுகளில் லீக் போட்டிகளில் இல்லாத அளவிற்கு புதிய சாதனையாக பார்க்கப்பட்டது

இப்படி ஒவ்வொரு வருடமும் புது புது அனுபவங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வரும் ஐபிஎல் தொடருக்கு மேலும் மேலும் மவுசு கூடிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மேலும் புதிதாக இரண்டு அணிகள் இணைய இருப்பதாக பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. ராஞ்சி, அகமதாபாத் மற்றும் கோவா ஆகிய மூன்று அணிகளில் ஏதேனும் இரண்டு அணிகளுக்கு 2020 ஆம் ஆண்டு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்கின்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன