வங்கதேசத்துக்கு எதிராக தீவிரம் குறையாமல் விளையாடுவோம்: விராட் கோலி உறுதி

வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் தீவிரம் குறையாமல் விளையாடுவோம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா – வங்கதேச அணிகள் சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தங்களது முதல் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அதே பர்மிங்காம் மைதானத்தில் தான் அரையிறுதிப் போட்டியும் நடக்கவுள்ளது.

இது பற்றி பேசிய கோலி, “நாங்கள் பர்மிங்காம் மைதானத்தில் விளையாடியுள்ளோம். அந்த களம் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. எங்கள் ஆட்டத்துக்கு தோதாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டோம், அந்த வெற்றியையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது. முன்னேற வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

“குரூப் ஸ்டேஜ் போட்டிகள் வேறுமாதிரி, அங்கு மூன்று போட்டிகள் விளையாடலாம். ஆனால், நாக்-அவுட் சுற்றுக்கு வந்துவிட்டால், வாழ்வா சாவா போட்டி போன்றது,” என கோலி கூறினார்.

“என்னுடைய யோசனை எப்பொழுதுமே ஒன்று தான், நான் எப்பொழுதுமே என் நாட்டுக்காக வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைப்பேன். என் மனநிலையை நான் எப்பொழுதும் மாற்ற போவதில்லை,” என மேலும் அவர் கூறினார்.

“நல்ல அணியாக முன்னேறி வருகிறது வங்கதேசம் மற்றும் அவர்களுடைய கிரிக்கெட்டையும் நன்றாக விளையாடி வருகின்றனர். அவர்களிடம் நல்ல வீரர்கள் உள்ளனர். பலம் வாய்ந்த அணியாக முன்னேறி வருகின்றனர், அது அனைவர்க்கும் தெரியும்,” என விராட் கோலி தெரிவித்தார்.

“டாப் எட்டு அணிகளுள் வங்கதேசம் அணியும் ஒன்று. நியூஸிலாந்து அணிக்கு எதிராக வங்கதேசம் அணி சிறப்பாக விளையாடியது. கடினமான நிலையில் இருந்து எப்படி வெற்றி பெறுவது என்பது அவர்களுக்கு தெரியும்,” என்றும் கூறினார்.

“இன்று தான் எங்களுக்கு பெரிய போட்டி. யுவராஜ் சிங்குக்காக நாங்கள் வெற்றி பெறுவோம். இரண்டு தொடர்நாயகன் வென்று, இரண்டிலும் இந்தியா கோப்பையை வென்றுள்ளது. பல போராட்டங்களில் இருந்து மீண்டு அணிக்கு வந்திருக்கிறார் அவர்,” என விராட் கோலி தெரிவித்தார்.

ஆசிய கண்டத்தை சேர்ந்த 3 அணிகள் சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதிக் கட்டத்தில் இருப்பதற்கு முக்கியக் காரணம் நாம் விளையாடும் ஆட்டங்களின் எண்ணிக்கை என்றே நினைக்கிறேன். நெருக்கடியான ஆட்டங்களில் வீரர்கள் அதிகமாக அனுபவம் பெறுகிறார்கள் என நினைக்கிறேன். தொடரில் சில அணிகள் எதிரணியை பேட்டிங் மற்றும் பவுலிங்கால் ஆச்சரியப்படுத்தியுள்ளது” என்று கோலி கூறினார்.

வங்கதேச அணி நியூஸிலாந்தை வீழ்த்தியதோடு, இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால், வங்கதேசம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி பெறும் என்ற சூழலிலிருந்து மீண்டு வந்து பெற்ற வெற்றி தங்கள் அணிக்கு சாதகமாக இருக்கும் என வங்கதேச அணித் தலைவர் மொர்டாஸா தெரிவித்துள்ளார்.

“கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் நன்றாக முன்னேறி வருகிறோம். நியூஸிலாந்தை வீழ்த்தியது போன்ற ஆட்டங்கள் நான் முன்னேறிச் செல்ல உதவி புரியும். முக்கியமாக 2019 இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை தயாரிப்புக்கு உதவியாயிருக்கும்”என்றார்.

இந்தியாவும் வங்கதேசம் இதுவரை 32 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் வங்கதேசம் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.