நடக்க இருக்கின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக மிக சிறப்பாக தயாராகிக்கொண்டிருக்கும் இஷாந்த் ஷர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிடைத்த வெற்றி எங்களுக்கு மனதளவில் நிறைய ஊக்கத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும், அதற்கடுத்த மூன்று போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தினோம்.
பின்னர் சில மாதங்கள் கழித்து இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதேபோல முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும், மீதமுள்ள போட்டியில் மிக சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றினோம்.
இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிடைத்த வெற்றி எங்களுக்கு மனதளவில் வேகத்தையும் உத்வேகத்தையும் அளித்து இருக்கிறது என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா விளக்கமளித்துள்ளார்.
110 சதவீதம் முழு எஃபோர்ட்டை நாங்கள் இறுதிப்போட்டியில் போடுவோம் – ஷமி
இது சம்பந்தமாக பேசியுள்ள முகமது ஷமி, விராட் கோலி கூறியது போல் இது இரண்டு வருடங்களாக நாங்கள் கடினமாக விளையாடியதற்குக் கிடைத்த பரிசு. இதனை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே இறுதிப் போட்டியில் நாங்கள் எங்களது முழு திறமையை காட்ட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி விட்டு நல்ல வேகத்துடன் எங்களுக்கு எதிராக களமிறங்கும். எனவே எல்லா வகையிலும் தயாராக நாங்கள் இருக்க வேண்டும் என்றும், இங்கிலாந்து மைதானங்களில் தட்ப நிலை குறித்து முன்கூட்டியே முடிவு செய்து இறுதிப்போட்டியில் மிகச் சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் முகமது ஷமி கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி 3:30 மணிக்கு ஆரம்பமாகும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பும் என்பது குறிப்பிடதக்கது.