அட்டூழியம் செய்த ஐந்து வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஐ.சி.சி
19 வயதுக்குட்பட்டவருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக 5 வீரர்களை ஐசிசி எச்சரித்து உள்ளது.
19 வயதுக்குட்பட்டவருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. இதில் வங்காளதேசம் சாம்பியன் பட்டம் பெற்று முதல்முறையாக உலககோப்பையை கைப்பற்றியது. அந்த அணி இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது.
வெற்றி கொண்டாட்டத்தின் போது வங்காளதேச வீரர்கள் மைதானத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதால் இந்திய கேப்டன் பிரியம் கார்க் குற்றம் சாட்டினார். வெற்றி கொண்டாட்டத்தில் வங்காள தேசம்-இந்திய வீரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் இறுதிப்போட்டியில் நடந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 5 வீரர்களை எச்சரித்து உள்ளது. வங்காளதேசத்தை சேர்ந்த முகமது தவ்கீத், ஷமிம் உசேன், ரகிபுல் அசன் ஆகியோர் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங் ஆகியோரையும் ஐ.சி.சி. எச்சரித்துள்ளது.

வீரர்கள் இடையேயான சண்டை குறித்து இந்திய கேப்டன் பேசியதாவது;
வெற்றியும் தோல்வியும் ஆட்டத்தில் ஒரு அங்கம். எனவே அது எங்களுக்கு பெரிய விஷயமல்ல. சில போட்டிகளில் ஜெயிப்போம், சில நேரங்களில் தோற்போம். எனவே அது பிரச்னையில்லை. ஆனால் வங்கதேச வீரர்களின் செயல்பாடுகளும் அணுகுமுறையும் அவர்கள் வெற்றியை கொண்டாடிய விதமும் ரொம்ப மோசம். இது நடந்திருக்கக்கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் என்ன செய்வது? நடந்துவிட்டதே.. ஓகே என்று பிரியம் கர்க் தெரிவித்தார்.