இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடந்த முதல் 2 ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் பேட்டிங்கில் அட்டகாசப்படுத்திய இந்திய அணி, நியூசிலாந்து நிர்ணயித்த 204 ரன்கள் இலக்கை ஒரு ஓவர் மிச்சம் வைத்து எட்டிப்பிடித்தது. அடுத்த ஆட்டத்தில் பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா, நியூசிலாந்தை 132 ரன்னில் சுருட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. இன்றைய ஆட்டத்திலும் இந்தியா மகுடம் சூடினால், நியூசிலாந்து மண்ணில் 20 ஓவர் தொடரை முதல்முறையாக சொந்தமாக்கி வரலாறு படைக்கும். அந்த சாதனை படைக்கும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் காத்திருக்கிறார்கள்.
முதல் 2 ஆட்டத்திலும் லோகேஷ் ராகுல் அரைசதம் விளாசினார். கேப்டன் விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் சூப்பர் பார்மில் உள்ளனர். ஆனால் துணை கேப்டன் ரோகித் சர்மா தான் இரண்டு ஆட்டத்திலும் (7, 8 ரன்) சோபிக்கவில்லை. அவரும் நிலைத்து நின்று ஆடினால் இந்திய அணி மேலும் வலுவடையும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் முந்தைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாக பந்து வீசினர். ஆனால் ரன்களை வாரி வழங்கும் ஷர்துல் தாகூரின் பந்து வீச்சு தான் கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது. அவரை மாற்றுவது குறித்து அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை இந்த ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா-சாவா? மோதலாகும். இதிலும் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்த முறை கூடுதல் எச்சரிக்கையுடன் விளையாடுவார்கள்.
போட்டிக்கான நியுஸிலாந்து அணி:
நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), காலின் டி கிரான்ட்ஹோம், ராஸ் டெய்லர், டிம் செய்பெர்ட், மிட்செல் சான்ட்னெர் அல்லது டேரில் மிட்செல், சோதி, டிம் சவுதி, பிளேர் டிக்னெர் அல்லது குஜ்ஜெலின், ஹாமிஷ் பென்னட்.