ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் கேரியரை துவங்கும் வேளையில் மனதில் நினைக்கும் ஒரு விஷயம், முடிந்த வரை நீண்ட நாட்களுக்கு தங்களது அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான். ஆனால் எப்பேர்பட்ட கிரிக்கெட் வீரராக இருந்தாலும் நிச்சயமாக ஒருநாள் ஓய்வு எடுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.
கிரிக்கெட் வீரர்கள் எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவ்வளவு தூரம் நீண்ட நாட்களுக்கு கிரிக்கெட் விளையாடுவார்கள். ஆனால் சிறப்பாக விளையாடாத பட்சத்தில் அல்லது அவர்களை விட சிறந்த வீரர்கள் அணியில் வரும் வேளையில், அவர்களுக்கு அணியில் வாய்ப்பு சரியாகக் கிடைக்காது.
அதன்படி வாய்ப்பு சரிவர கிடைக்காத காரணத்தினால் எதிர்பாராதவிதமாக மிக சீக்கிரமாகவே தங்களது ஓய்வு அறிக்கையை வெளியிட்ட ஒரு சில வீர்களை நாம் பார்த்திருக்கிறோம். தற்பொழுது இந்திய அணியில் விளையாடி வரும் நட்சத்திர வீரர்களில் ஒருசிலர் கூடிய விரைவில் ஓய்வு அறிக்கையை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அந்த வீரர்கள் யார் யார் என்று தற்பொழுது பார்ப்போம்.
ரவிச்சந்திரன் அஸ்வின் – ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்
ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் தற்பொழுது மிக சிறப்பாக விளையாடி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆனால் அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடிய ஒரு வீரர். மொத்தமாக ஒரு நாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அதேபோல டி20 போட்டிகளில் மொத்தமாக 52 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

ஆனால் அவர் தற்பொழுது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவது கிடையாது. ஐபிஎல் தொடர்களில் மிகச் சிறப்பாக விளையாடி வந்தாலும் இந்திய அணி டி20 போட்டிகளில் அவருக்கான வாய்ப்புகள் தற்போது வழங்குவது இல்லை என்பதுதான் உண்மை. அவரது இடத்தை நிரப்ப நிறைய இளம் வீரர்கள் வந்து விட்ட நிலையில் கூடிய விரைவில், அவர் தன்னுடைய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தனது ஓய்வு அறிக்கையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.