2023 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மீண்டும் ஏபி டிவில்லியர்ஸ் களம் இறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008 ஐபிஎல் தொடர் ஆரம்பமான பொழுது டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தேர்வான ஏபிடி வில்லியர்ஸ் தன்னுடைய முதல் போட்டியிலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். பின் 2011ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், பதினோரு வருடங்கள் பெங்களூர் அணிக்காக தன்னுடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்து வந்தார்.
உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களை மிக நேர்த்தியாகவும் லாவகமாகக் கையாளும் திறமை படைத்த இவர், மைதானத்தில் நாலாபுறமும் பந்தை அடித்து ஆடுவதில் வல்லவர்.இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிஸ்டர் 360 என்ற செல்லப் பெயரும் உண்டு, ஐபிஎல் தொடரில் 156 போட்டிகளில் பங்கேற்று 4491 ரன்களை அடித்துள்ளார்,அதில் 2 சதங்களும் 37 அரை சதங்களும் அடங்கும்.

இந்த நிலையில் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படாததால் ஐபிஎல் தொடர் உட்பட ஒட்டுமொத்த கிரிக்கெட் தொடரிலிருந்து ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வை அறிவித்தார்.
ஆனால் பெங்களூரு அணி இவரை மறக்காமல் கவுரவப்படுத்தும் வகையில் தன்னுடைய அணியின் ஹால் ஆப் பேம்(HALL OF FAME) என அறிவித்தது.
இந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மீண்டும் ஏபி டிவில்லியர்ஸ் இடம்பெறுவதாக பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்திருந்தார். (அது பயிற்சியாளர் பணியா அல்லது வேறு ஏதேனும் பொறுப்பா என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை).
இந்த நிலையில் தான் மீண்டும் 2023 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பங்கேற்கும் விஷயத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் ஏபி டிவில்லியர்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

பெங்களூர் அணியில் சேர்வது குறித்து பேசிய ஏபி டிவில்லியர்ஸ், “நான் மீண்டும் பெங்களூரு அணியில் இணைவதை விராட் கோலியே தெரியப்படுத்தி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, வெளிப்படையாக சொல்லப் போனால் இன்னும் எனக்கு எந்த பொறுப்பு என்று முடிவாகவில்லை அது எதுவாக இருந்தாலும் நான் சிறப்பாக செய்வேன், நிச்சயம் அடுத்த வருடம் பெங்களூர் அணிக்காக எனது கடமையைச் செய்தேன் மேலும் பெங்களூர் அணியில் மீண்டும் திரும்பியுள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஏபி டிவில்லியர்ஸ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.