சுமார் 16 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்க இருப்பதாக அதன் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பல ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இல்லை. அதே போல் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்களது வீரர்களை பாகிஸ்தான் அனுப்ப அச்சம் கொண்டிருந்ததால், இரு நாடுகளுக்கும் பொதுவான இடமான துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் தற்போது பாக்., நாட்டில் தீவிரவாதம் குறைந்துள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் மற்ற நாட்டின் அணிகளை தங்களது நாட்டிற்கு அழைத்து கிரிக்கெட் விளையாட கோரிக்கை விடுத்து வருகிறது.
கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக வீரர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். அதன் பிறகு இலங்கை அணியும் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதில்லை என முடிவு செய்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி நாடு திரும்பினர். அதன்பிறகு ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் சென்று லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடியது.
இதனைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் வருமாறு அதன் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்று அடுத்த வருட அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் பாகிஸ்தான் வரவிருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடக்கும் இந்த டி20 தொடரை முடித்துவிட்டு நேரடியாக இங்கிலாந்து வீரர்கள் இந்திய வந்தடைந்து உலக கோப்பை தொடரில் பங்கேற்பர் எனவும் அந்த வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
வருகிற ஜனவரி மாதம் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் வந்து விளையாடுமாறு பாக்., கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிக்பாஸ் லீக் என அடுத்தடுத்து பெரிய தொடர்கள் வருவதால் அப்போது போதிய கால அவகாசம் இல்லை என தெரிவித்திருந்தது. இறுதியாக தற்போது அக்டோபர் மாதம் வருவதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்திருக்கிறது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல் அதிகாரி வாசிம்கான் கூறுகையில், “பாகிஸ்தான் நாட்டிற்கு மற்ற அணி வீரர்கள் மெல்ல மெல்ல வரத் துவங்கியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் வீரர்கள் தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் வந்து விளையாடி தங்களது அனுபவத்தை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே, இத்தகைய முடிவுகளை அணி நிர்வாகம் எடுத்து வருகிறது என்பது தெரிகிறது. வரும் ஆண்டுகளிலும் பாகிஸ்தான் இயல்பு நிலைக்கு திரும்பும் பிறகு கிரிக்கெட் போட்டிகளும் இங்கு இயல்பாக நடக்கும்.” என குறிப்பிட்டார்.


