பயிற்சி போட்டியின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக வாசிங்டன் சுந்தர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துவிட்டதால், இங்கிலாந்தின் ஆடுகளங்களை புரிந்து கொள்வதற்காக இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பயிற்சி போட்டிகள் வேண்டும் என பிசிசிஐ., கோரிக்கை வைத்தது. இதனால் இந்திய அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்து, ஒரு பயிற்சி போட்டி தற்போது நடைபெற்றும் வருகிறது.

இந்தநிலையில், பயிற்சி போட்டியின் போது விரலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இந்திய அணியின் இளம் வீரரான வாசிங்டன் சுந்தர் இங்கிலாந்து தொடரில் இருந்து முழுமையாக விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சுப்மன் கில், அவேஸ் கான் ஆகியோர் காயம் காரணமாக விலகியிருந்த நிலையில் தற்போது வாசிங்டன் சுந்தரும் விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
வாசிங்டன் சுந்தருக்கான மாற்று வீரர் யார் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.