ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் 29 பந்துகளில் 68 ரன்கள் விளாசியதன் மூலம் பினிஷிங் ரோலில் புதிய சாதனை படைத்திருக்கிறார் சர்துல் தாக்கூர்.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர் குர்பாஸ் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் அடிக்க, மற்றவீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். இதனால் 89/5 என்கிற இக்கட்டான நிலையில் கொல்கத்தா அணி இருந்தது.
அந்த நேரத்தில் 7ஆவது வீரராக களத்திற்குள் வந்த சர்துல் தாக்கூர், பவுண்டரி சிக்ஸர்களாக விளாசி வெறும் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் 29 பந்துகளில் 68 ரன்கள் அடித்து அணிக்கு முக்கிய பங்காற்றினார்.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது கொல்கத்தா. இந்த ஸ்கொரை சேஸ் செய்த ஆர்சிபி அணி 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இறுதியில் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
பேட்டிங் பவுலிங் பீல்டிங்கில் முக்கியமான கேட்ச் என ஆல்ரவுண்டர் ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்துல் தாக்கூர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனை பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் 7ஆவது அல்லது அதற்கு கீழே பேட்டிங் இறங்கி அதிக ஸ்கொர் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதன் பட்டியல் பின்வருமாறு:
1. ஆன்ட்ரே ரஸ்ஸல்(கொல்கத்தா) – 88*(36) – 2018
2. சர்துல் தாக்கூர்(கொல்கத்தா) – 68(29) – இன்று
3. டிவைன் பிராவோ(சென்னை) – 68(30) – 2018
4. பாட் கம்மின்ஸ்(கொல்கத்தா) – 66*(34) – 2021
5. தினேஷ் கார்த்திக்(பெங்களூரு) – 66*(34) – 2022
மேலும், 5 விக்கெட்டுகள் போனபிறகு உள்ளே வந்து ரிங்கு சிங் உடன் சேர்ந்து விளையாடினார். 6ஆவது விக்கெட்டிற்கு 103 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி. இதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் 6ஆவது அல்லது அதற்கு கீழே பார்ட்னர்ஷிப் அமைத்து அதிக ரன்கள் அடித்த ஜோடிகள் பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது இந்த ஜோடி. பட்டியல் பின்வருமாறு:

1. அம்பத்தி ராயுடு & கீரன் பொல்லார்ட்(மும்பை) – 122* ரன்கள் – 2012
2. டேவிட் ஹஸ்ஸி & விருதிமான் சஹா(பஞ்சாப்) – 104 ரன்கள் – 2008
3. சர்துல் தாக்கூர் & ரிங்கு சிங்(கொல்கத்தா) – 103 ரன்கள் – இன்று
4. ஜெகதீசா சுச்சித் & ஹர்பஜன் சிங்(மும்பை) – 100 ரன்கள் – 2015