நாட்டிற்காக இதை மட்டும் செய்யுங்கள்; கோரிக்கை வைத்துள்ளார் ராகுல் டிராவிட்
கொரோனாவை தடுத்துவிரட்ட, ஊரடங்கை பின்பற்றி மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு ராகுல் டிராவிட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உலகையே திணறடிப்பதுடன், மனித குலத்திற்கே பெரும் சவாலாக திகழும் கொரோனா உலகளவில் 30ஆயிரத்துக்கும் அதிகமானோரை காவு வாங்கியுள்ளது.
இந்தியாவில் 1200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா இந்தியாவில் சமூக தொற்றாக பரவுவதை தடுக்கும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே வரலாம் கண்டிஷனை தவறாக பயன்படுத்தி பலர் பொய் காரணங்களை கூறி பொதுவெளியில் சுற்றித்திரிவதை பார்க்கமுடிகிறது. காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துவருகின்றனர். ஆனால் பலர் திருந்துவதாக தெரியவில்லை.
எனவே சினிமா பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் மக்களை வீட்டிலேயே தனிமைப்படுமாறு அறிவுறுத்திவருகின்றனர். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே ஆகியோர் மக்களை வீட்டிலேயே தனிமைப்படுமாறு டுவிட்டரில் வீடியோ வெளியிட்டு அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட், அறிவுறுத்தியுள்ளார்.
பெங்களூரு காவல்துறை டுவிட்டர் பக்கத்தில் ராகுல் டிராவிட்டின் விழிப்புணர்வு உரையை வெளியிட்டுள்ளது. அதில் பேசிய ராகுல் டிராவிட், கொரோனா வைரஸூக்கு எதிராக உலகமே போரிட்டுவருகிறது. நமது மக்களை காப்பதற்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்த்வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு ஆதரவளிக்க நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பு இது.
Stay Indoors, Save the Nation: Rahul Dravid#StayHomeStaySafe#ArrestCorona#NationFirst pic.twitter.com/qkGyapNNVX
— BengaluruCityPolice (@BlrCityPolice) March 29, 2020
அப்படி ஆதரவளிக்க, நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்; அது வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுவதுதான். நாம் வீட்டிலேயே தனிமைப்படுவதுதான், இப்போதைக்கு நமது நாட்டிற்கும் சக மனிதனுக்கும் நாம் செய்யும் பெரிய சேவையாக இருக்கும். நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் தனிமைப்படுவது மட்டுமே, நமக்காக இரவு பகலாக நேரம் பாராமல் உழைப்பவர்களுக்கும் நமது நாட்டிற்கும் நாம் கொடுக்கும் சிறந்த பரிசாக இருக்க முடியும். எனவே மக்கள் வீட்டிற்குள்ளேயே ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள் என்று ராகுல் டிராவிட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.