கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுகிறார் தென் ஆப்ரிக்காவின் புதிய கேப்டன்
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட மார்கரம், கவுண்டி கிரிக்கெட் தொடரில் துர்காம் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டியில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா அணியை மூன்றாவது போட்டியில் இருந்து சோதனை பிடித்து கொண்டது.
காயம் காரணமாக டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன், டூபிளசிஸ், டி.காக் என தென் ஆப்ரிக்கா அணியின் நட்சத்திர வீரர்கள் பட்டாளமே வெளியேறியது. இதில் முதல் ஒருநாள் போட்டிக்கு பிறகு அந்த அணியின் கேப்டன் டூ பிளசிஸ் விலகியதால் அவருக்கு பதிலாக மார்கரம் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இளம் தென் ஆப்ரிக்கா அணியை ஒரு கேப்டனாக இருந்து வெற்றிப்பாதையில் அழைத்து சென்ற இவரை, தென் ஆப்ரிக்கா அணியின் அடுத்த கேப்டனாக நியமிப்பதற்கான சோதனை முயற்சியாக தான் இது பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மார்கரமிற்கு புதிய அங்கீகாரமாக கவுண்டி கிரிக்கெட் தொடருக்கான புர்காம் அணியில் விளையாட இவர் ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக விரைவில் இங்கிலாந்து செல்லும் இவர், கவுண்டி கிரிக்கெட்டின் முதல் சில போட்டிகளில் துர்காம் அணிக்காக விளையாட உள்ளார். அதன் பின் ஆஸ்திரேலிய அணியுடனான தொடரில் பங்கேற்க நாடு திரும்புகிறார்.

இது குறித்து பேசிய துர்காம் அணியின் சேர்மன், இயான் போதம், மார்கரமை எங்கள் அணியில் இணைத்துள்ளதன் மூலம் எங்கள் அணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளதாக உணர்கிறேன். மார்க் வுட், ஸ்டோக்ஸ், டாம் லாதம் போன்ற எங்கள் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் பலர் சர்வதேச போட்டியில் தங்கள் நாட்டிற்காக விளையாட உள்ளதால் அவர்களால் இந்த தொடரில் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில் தற்போது மார்கரம் அணியில் இணைந்திருப்பது மற்ற வீரர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.