வங்கதேச அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடாமல் இருப்பது நல்லது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா.
வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டிசம்பர் 18ஆம் தேதி முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியின் போது ரோகித் சர்மாவிற்கு கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. ஆகையால் அவரால் மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போனது. ஆகையால் கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார்.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு வருவதற்கு ரோகித் சர்மா அணி நிர்வாகத்திடம் தகவல் கொடுத்து இருக்கிறார். இது குறித்து அணி நிர்வாகம் இன்னும் முடிவு செய்யவில்லை.
இந்த சூழலில், ‘ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட கூடாது. இன்னும் அவர் இந்தியாவிலேயே இருப்பது தான் மிகவும் சரியாக இருக்கும்.’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா. அவர் கூறியதாவது:
“வீரருக்கு விரலில் காயம் ஏற்பட்டால் அவர் குணமடைந்தபின் மீண்டும் பேட்டை பிடித்து விளையாட குறைந்தபட்சம் 10 நாட்கள் ஆகும். ரோகித் சர்மாவின் கையில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டிருக்கிறது. எப்படி அவரால் இவ்வளவு சீக்கிரம் பேட்டிங் செய்ய வரமுடியும்?. காயம் ஏற்பட்டே 10 நாட்கள் தான் இருக்கும். அதற்குள் எவ்வாறு குணமடைந்தார். அவரது மருத்துவ அறிக்கையை ஏன் வெளிவிடவில்லை?. மேலும், அப்படியே அவர் குணமடைந்து இருந்தாலும், அடுத்த நாளே எப்படி அணிக்குள் வர முடியும்?.
அவரது நல்லதுக்காக கூறுகிறேன், அவர் இந்தியாவிலேயே இருந்து இன்னும் சில நாட்கள் ஓய்வு எடுத்து முழுமையாக குணமடைந்த பிறகு அணிக்கு திரும்புவது நல்லது. இன்னும் 10-15 நாட்கள் ஓய்வு தாராளமாக கொடுக்கலாம்.
இலங்கை அணியுடன் நடக்கும் தொடரில் அவரே ஓய்வு எடுப்பது விருப்ப ஓய்வு எடுப்பது நல்லது. நானும் ஒரு பேட்ஸ்மேன். எனக்கும் இது போன்ற காயங்கள் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. ரோகித் சர்மாவின் ஆர்வம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அணிக்கு திரும்பிய பிறகு, மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டால் அது இன்னும் சிக்கல்தான். இப்போது இருப்பதை விட இன்னும் மிகப்பெரிய விளைவுகளை கொடுக்கும். நிரந்தர தீர்வு வேண்டுமென்றால் இதை செய்வது சிறந்தது. தற்காலிக முடிவுகள் எதுவும் எடுத்துவிடாதீர்கள்.” என்றார்.