ஆஃப்கானிஸ்தானிற்கு எதிராக இந்திய அணியை வழிநடத்துகிறார் ரஹானே
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அஜிக்னியா ரஹானே வழிநடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு கடந்த ஆண்டு டெஸ்ட் அங்கீகாரம் அளித்தது. அயர்லாந்து அணி வருகிற 11-ந்தேதி பாகிஸ்தானுடன் முதல் டெஸ்டில் விளையாடுகிறது. ஆப்கானிஸ்தான் அணி தனது அறிமுக டெஸ்டில் இந்தியாவுடன் விளையாடுகிறது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஜூன் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணி வருகிற 8-ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலர் ஆடமாட்டார்கள் என்று கூறப்பட்டது. எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக முன்கூட்டியே முன்னணி வீரர்கள் அங்கு சென்று பயிற்சியில் ஈடுபவடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

கேப்டன் விராட்கோலி, ரகானே, புஜாரா, முரளி விஜய், தவான், அஸ்வின், இஷாந்த்சர்மா, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய 9 வீரர்கள் ஆடமாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக இலங்கையில் நடந்த 20 ஓவர் போட்டியில் விளையாடிய வீரர்கள் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது.
முழுவதும் இளம் வீரர்கள் கொண்ட அணியை ஆப்கானிஸ்தானுடன் மோத விடுவது சரியானது அல்ல. முக்கிய வீரர்கள் சிலரும் இடம்பெற வேண்டும் என தேர்வுக்குழு நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால், டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக உள்ள ரகானே தலைமையில் அணி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புஜாரா, இஷாந்த்சர்மா ஆகியோர் ஏற்கனவே இங்கிலாந்தில் கஷண்டி அணியில் ஆடி வருகிறார்கள். கோலி, அஸ்வினும் இங்கிலாந்து கஷண்டி அணியில் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இதனால், ரகானே தலைமையில் அணி அறிவிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளது. அதே போல் இந்த தொடருக்கான பயிற்சி போட்டியில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.